தமிழக செய்திகள்

TN Election 2026 | இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. ஒதுக்கிய தொகுதிகளின் எண்ணிக்கை விவரம்..!

தி.மு.க. தன்னுடைய கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது

மாலை மலர்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கும் நிலையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க தீவிரம் காட்டி வருகின்றன.

தி.மு.க., அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு கட்சிக்காக தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதி கேட்டு அடம்பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 5 இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் தற்போதுதான் கையெழுத்தானது.

இதன்மூலம் திமுக, இதுவரை ஏழு கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா 5 இடங்களை ஒதுக்கியுள்ளது. மதிமுக-வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. 3 தொகுதிகளில் திமுக சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிடுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு இடங்களை ஒதுக்கியுள்ளது. கொ.ம.தே.க.-வுக்கு 2 இடங்களும், மனித நேய மக்கள் கட்சி-க்கு 2 இடங்களும் ஒதுக்கியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் திமுக சின்னத்திலேயே போட்டியிட இருக்கிறது.

இன்னும் விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ. கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் அதிக இடங்களை கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது.