பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், எந்தத் தவறும் செய்யாத அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுனரை அரசுப் போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் காலணியால் அடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அதற்குக் காரணமாக உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், காவல்துறையும் அவரை காணொலியில் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டு ஒதுங்கியிருப்பது அதைக் விடக் கொடுமையானது. போக்குவரத்துக்கழகம் மற்றும் காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
பாதிக்கப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுனர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக, பேருந்தை இயக்கும்படி பயணிகள் கோரிய போது உயரதிகாரியான மேலாளர் ஆணையிட்டால் தான் இயக்க முடியும் என்று கூறியுள்ளார். இதில் எந்தத் தவறும் இல்லை.
இது தொடர்பாக உதவி மேலாளரிடம் பயணிகள் முறையிட்ட போது, பயணிகளை தரக்குறைவாக பேசிய உதவி மேலாளர், சம்பந்தப்பட்ட ஓட்டுனரை தாம் அணிந்திருந்த காலணியால் அடித்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றம்.
ஓட்டுனரை உதவி மேலாளர் காலணியால் தாக்கும் காணொலி வைரலாகி வரும் நிலையில், அதனடிப்படையில் விசாரணை நடத்தி உதவி மேலாளர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஓட்டுனர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக நடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்பதாக உதவி மேலாளரை காணொலி வெளியிடச் செய்திருக்கிறது அரசு. இது அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து என்பதைத் தவிர வேறில்லை.
பொதுமக்கள் மத்தியில் ஒருவரை எவரேனும் காலணியால் தாக்கும்பட்சத்தின் அவர் காணொலியில் மன்னிப்பு கேட்டால் போதுமானது என்றால், பலரும் முன்கூட்டியே மன்னிப்பு காணொலிகளை பதிவு செய்து வைத்து விட்டு, யாரை வேண்டுமானாலும் காலணியால் தாக்குவார்கள். இப்படி ஒரு சூழலைத் தான் தமிழக அரசு, போக்குவரத்துக் கழகம், காவல்துறை ஆகியவை விரும்புகின்றனவா? என்பதை அரசு விளக்க வேண்டும்.
அரசின் கடமை நிர்வாகம் செய்வது தான், கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ஓட்டுனர் தாக்கப்பட்டதற்கு காரணமான உதவி மேலாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
A scene of a Coimbatore டிவிசன் ( தாராபுரம் டெபாட் )driver being slapped by officials at the Madurai Aarapalayam bus stand.?♂️A situation where no one is safe beyond another division..Authorities should investigate and take appropriate action.. pic.twitter.com/nIpYtDKVms