வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பெருமாள் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராமலிங்கம். இவரது மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் தனது தாய், தந்தையை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அதே தெருவில் உள்ள மற்றொரு வீட்டின் வளர்ப்பு நாய் நடந்து சென்றுள்ள அந்த பெண்ணை ஓடி வந்து கடித்துள்ளது. இதனால் வலி தாங்காமல் அவர் அலறி துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்ட தாய், மகளை காப்பாற்றுவதற்காக ஓடி வந்துள்ளார். அப்போது அவரையும் விட்டு வைக்காமல் அந்த நாய் கடித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் வளர்ப்பு நாயின் உரிமையாளர் வீட்டை விட்டு வெளியே வந்து தாய்- மகளை நாய் கடிப்பதை தடுக்காமல் வீட்டின் கேட்டை பூட்டி விட்டு, மனிதாபிமானம் இல்லாமல் குடும்பத்துடன் அதனை வேடிக்கை பார்த்தபடி இருந்துள்ளார்.
பின்னர், ஒருவழியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய், மகளை நாய் கடித்த சம்பவம் அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. தற்போது அந்த பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.