கள்ளக்குறிச்சி:
கோவையை சேர்ந்தவர் சுபஷனா (வயது28). சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் வெங்கடேசன். தனியார் வங்கியில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
சுபஷனா மாமியார் உஷா (72). இவரது பேரக்குழந்தைகள் அக்சத் (9), அங்குத் (7). சுபஷனா உறவினர் சிவக்குமார் (55). இவர்கள் சென்னையில் தாங்கள் வசித்து வரும் வீட்டை காலி செய்து விட்டு சொகுசு காரில் கோவை புறப்பட்டனர்.
காரை ஐ.டி. ஊழியர் சுபஷனா ஓட்டி வந்தார். இந்த கார் இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தத்தாதிரிபுரம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள மரத்தில் கார் மோதியது.
இதில் காரை ஓட்டி வந்த சுபஷனா தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரின் முன்னால் அமர்ந்திருந்த சுபஷனாவின் மாமியார் உஷாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சுபஷனாவின் கணவர் வெங்கடேஷ் மற்றும் குழந்தைகள் அக்சத், அங்குத் மற்றும் உறவினர் சிவக்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கீழ்க்குப்பம் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் பலியான சுபஷனா, உஷா ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கீழ்க்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் மரத்தில் மோதி மருமகள்-மாமியார் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.