ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கம் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் திருவாடானை அருகே பரமணி வயல் கிராமத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள மின் கம்பத்தில் இருந்து சட்ட விரோதமாக மின் இணைப்பு எடுக்கப்பட்டதாக தேர்தல் உதவி அலுவலர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்தார்.
திருவாடானை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கம், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பால்சாமி, தி.மு.க. நிர்வாகி பாலுச்சாமி, ஒலி பெருக்கி உரிமையாளர் ஆகிய 4 பேர் மீது திருவாடானை இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்துள்ளார்.