சென்னை:
கொரோனா 2-வது அலை சென்னையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை சமாளிக்க வெளி மாவட்டங்களில் இருந்து நர்சுகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றிய 1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனை, கிண்டி கிங் கொரோனா மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
தற்காலிகமாக கொரோனா தடுப்பு பணிக்காக மாற்றப்பட்ட அவர்கள் 2 மாதம் இங்கு தங்கி இருந்து வேலை செய்தனர். கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது வெளி மாவட்டங்களை சேர்ந்த டாக்டர்கள், நர்சுகளின் செயல்பாடு கை கொடுத்தது.
இதன் விளைவாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு படிப்படியாக குறைந்தது.
சென்னையில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன. இதனால் வெளி மாவட்டத்தில் இருந்து பணியாற்றிய நர்சுகளை சொந்த ஊருக்கு மாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது.
அதன்படி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த நர்சுகள் படிப்படியாக சொந்த ஊர்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள்.
முன்னதாக அவர்களுக்கு கடந்த மாதம் தாங்கள் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் பணி நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் அனைவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் ஓமந்தூரார் ‘பி’பிளாக், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரி, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாம்பரம் சானடோரியம் மருத்துவமனை ஆகிய இடங்களில் பணிபுரிந்து வந்த நர்சுகள் தவிர மற்றவர்கள் அனைவரும் படிப்படியாக சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
இந்த 6 மருத்துவமனைகளில் மட்டும் மேலும் ஒரு வாரம் நர்சுகள் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் இந்த நடவடிக்கையை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்... தமிழகத்தில் கொரோனா 2-வது அலை முடிவுக்கு வருகிறது