சென்னை:
டி.டி.வி. தினகரன் அணி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சைதை ஜி. செந்தமிழன் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அ.தி.மு.க. பொதுக் குழுவை கூட்டுவற்கு பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது.
5-ல் ஒரு பங்கு நிர்வாகிகள் பொதுக் குழுவை கூட்ட நினைத்தாலும் அதை பொதுச் செயலாளரிடம் தான் கோரிக்கையாக வைக்க முடியும். இதுதான் அ.தி.மு.க.வின் சட்ட விதியாகும்.
ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி அணியினர் பொதுக்குழுவை கூட்டுவதாக இடம், தேதி, நேரம் குறிப்பிட்டு அழைப்பு அனுப்பி விட்டு, இப்போது அந்த நிர்வாகிகளிடம் பொதுக் குழுவை கூட்ட கோரிக்கை வைத்ததுபோல் முன் தேதியிட்டு கடிதம் வாங்குகிறார்கள்.
எனவே இவர்கள் கூட்டும் பொதுக் குழுவை போர் ஜரியானது. செல்லாது அதனால்தான் நாங்கள் கோர்ட்டுக்கு சென்றுள்ளோம்.
கட்சிப் பணியிலும், மக்கள் பிரச்சினையிலும் டி.டி.வி. தினகரனின் செயல்பாடு வேகமாக உள்ளது.
நீட் தேர்வு விலக்கு கோரி முதலில் ஆர்ப்பாட்டம் அறிவித்தோம். உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக அந்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இப்போதைய எங்களது முக்கிய கோரிக்கை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை பதவியில் இருந்து நீக்குவதுதான்.
எங்கள் பக்கம் இருந்த ஜக்கையன் எம்.எல்.ஏ. எடப்பாடி பக்கம் போனாலும் கருணாஸ் எங்களிடம் வந்துள்ளார். இதேபோல் பல எம்.எல்.ஏ.க்கள் வரக் கூடும்.
இவ்வாறு செந்தமிழன் கூறினார்.