இந்தியா

VIDEO: கும்பமேளா சிறப்பு ரெயில் - கற்களை வீசி தாக்கிய பயணிகள்

பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரெயிலுக்குள் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர்.

மாலை மலர்

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் கடந்த 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான அடுத்த மாதம் 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 35 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். மேலும் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரயாக்ராஜ் நோக்கி புறப்பட்ட சிறப்பு ரெயில் மீது பயணிகள் கற்கள் வீசி ஜன்னல்களை உடைப்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜான்சி ரெயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு பிரயாக்ராஜூக்கு புறப்பட்ட ரெயில் ஹர்பால்பூரை வந்தடைந்தது. இதையடுத்து ரெயில் ஏற ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அப்போது ரெயில் கதவுகள் வெகுநேரமாகியும் திறக்காததால் கோபமடைந்த பயணிகள் கற்களை வீசி ஜன்னல்கள் மீது வீசினர். இதனால் ரெயிலுக்குள் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அந்த ரெயில்வே போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெயில் புறப்பட்டது.