இந்தியா

நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

ஆகஸ்ட் 1 அன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.மனுதாரர்கள் உரிமைக் கோர முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

பீகாரில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தும் மேற்கொண்டது.

கடந்த ஆகஸ்ட் 1 அன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். செப்.30-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்களின் தகவல்களை ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் அது கட்டாயமில்லை என ஆணையம் பதிலளித்துள்ளது.

தேர்தல் ஆணையம் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில், 65 லட்சம் வாக்காளர்களின் விவரத்தை யாரும் கேட்கவில்லை.

வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்ற விதி சட்டத்தில் இல்லை. மனுதாரர்கள் உரிமைக் கோர முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் என்றும் அதற்கு முன்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு, கருத்துகள் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் வழங்க கால அவகாசம் கொடுக்கப்படும் என்றும் எந்த ஒரு ஆவணமும் வழங்க முடியாமல் இருக்கும் வாக்காளர்களுக்கு உரிய ஆவணங்கள் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

தற்காலிகமாக புலம்பெயர்ந்தோர்களுக்காக 246 நாளிதழ்களில் ஹிந்தி மொழியில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.வாக்காளர்களுக்கு உதவ 2.5 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்றும் தெரிவித்துள்ளது.