இந்தியா

பாகிஸ்தானின் டி.ஆர்.எப். பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.இதற்கு பாகிஸ்தானில் செயல்படும் டி.ஆர்.எப். என்ற அமைப்பு பொறுப்பை ஏற்றுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றது. இந்த டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்தது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும் (எப்டிஓ), நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாத அமைப்பாகவும் (எஸ்டிஜிடி) அறிவிக்கிறது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கேட்டும் அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த அழைப்பைச் செயல்படுத்துவதிலும் அமெரிக்க நிர்வாகம் உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில், டி.ஆர்.எப். அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டி.ஆர்.எப். அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவிக்கிறது. இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களை செய்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த முடிவுக்காக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோவை பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.