இந்தியா

கேரளாவை பின்தங்கிய மாநிலமாக அறிவித்தால் நிதி கிடைக்கும்- மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து

பின்தங்கிய மாநிலங்களுக்குதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் சாலைகள் இல்லை, கல்வி இல்லை என்று சொல்லுங்கள்.

மாலை மலர்

மத்திய அரசின் 2025-26க்கான பட்ஜெட்டில் கேரளாவிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், கேரளாவை பின்தங்கிய மாநிலமாக அறிவித்தால் அதிக பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பெறலாம் என்று மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜார்ஜ் குரியன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைக்கான மத்திய இணை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "பின்தங்கிய மாநிலங்களுக்குதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவை பின்தங்கிய மாநிலமாக அறிவியுங்கள், எங்களுக்கு சாலைகள் இல்லை, கல்வி இல்லை என்று சொல்லுங்கள். கேரளா கல்வியிலும் சமூகத்திலும் பின்தங்கியதாகவும், உள்கட்டமைப்பு ரீதியாகவும் பின்தங்கியுள்ளதாக அறிவித்தால், நிதி ஆணையம் இதை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்" என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.