இந்தியா

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு - தொழில்துறை டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 அதிகரிப்பு

தொழில்துறை டீசல் மற்றும் ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிகரிப்பு

மாலை மலர்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, இன்று ப்ரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாயும், தொழிற்சாலைகளுக்கு விற்கப்படும் மொத்த விற்பனை டீசல் லிட்டருக்கு சுமார் 22 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழில்துறை டீசல் விலையை லிட்டருக்கு ரூ.87.67-லிருந்து ரூ.109.59 ஆக உயர்த்தியுள்ளது. இது சுமார் 25% உயர்வு ஆகும்.

மேலும் தொழில்துறைக்கு பயன்படுத்தப்படும் லைட் டீசல் ஆயில் (LDO) விலையும் லிட்டருக்கு ரூ.22 முதல் ரு.28 வரை  அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பெட்ரோல், டீசல் விலையும் எந்த மாற்றமும் இல்லை.

“ப்ரீமியம் பிரிவில் சிறிதளவு மட்டுமே விலை உயர்ந்துள்ளது. இது (நாட்டில் விற்கப்படும்) மொத்த பெட்ரோலில் 2-4 சதவீதம் மட்டுமே. சாதாரண மக்களுக்கான பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை” என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் எண்ணெய் நிறுவனங்களாலேயே இந்த விலை நிர்ணயிக்கப்படுகின்றன என்றும், அரசு விலையை உயர்த்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து நுகர்வோருக்கும் எரிசக்தியைக் கிடைக்கச் செய்வதே எங்கள் முன்னுரிமை. இந்த நெருக்கடி காலம் முழுவதும் நாங்கள் அதைத்தான் செய்து வருகிறோம். இதுவரை நாங்கள் விலைகளை உயர்த்தவில்லை என தெரிவித்தார்.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தையும், இயற்கை எரிவாயு தேவையில் ஏறக்குறைய பாதியையும் இறக்குமதி செய்கிறது. இவை பெரும்பாலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகின்றன.

இப்போது அங்கு நிலவும் போரால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. தற்போது இந்தியாவிற்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய 2022ஆம் ஆண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.