கொரோனா பரவலை தடுக்க 5-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், 8-ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மட்டும் பக்தர்களை அனுமதிக்கவில்லை. பின்னர் 12-ந்தேதி பக்தர்களை அனுமதிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கோவிலில் வேலை பார்க்கும் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், கோவிலில் பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிப்பது திடீரென ரத்து செய்யப்பட்டது. கோவிலில் வேலை பார்க்கும் அனைத்து அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்தது. இதனால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.
இந்தநிலையில் ஆந்திர மாநில அறநிலையத்துறை அனுமதியோடு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 17-ந்தேதி முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக நிர்வாக அதிகாரி சந்திரசேகர்ரெட்டி தெரிவித்துள்ளார். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 6 அடி தூரம் நின்று சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் வழக்கம்போல் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப்பூஜையில் பங்கேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். எனினும், 30 சதவீத பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்கள் அனுமதிக்கப்பட மாட்டாது எனக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.