செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் பயணியுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட ஊழியர் (வீடியோ)

டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவருடன் இண்டிகோ விமான நிறுவன ஊழியர் கட்டிப்புரண்டு சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விமானத்தில் ஏறுவதற்காக ஒரு பயணி வந்துள்ளார். ஆனால், அவர் தாமதமாக வந்ததாக கூறி விமானத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்ற இண்டிகோ விமான நிறுவன பணியாளர் ஒருவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த ஊழியருக்கும் பயணிக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது, மற்றொரு ஊழியர் அவரை நோக்கி தகாத வார்த்தைகளை கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த பயணி, ஊழியரின் சட்டையை பிடித்து அடிக்க முயன்றார். பதிலுக்கு ஊழியரும் அவரை தாக்கி கீழே தள்ளினார்.

இருவரும் தரையில் கட்டி உருண்டபடி சண்டையிட்டுள்ளதை கண்ட மற்ற பணியாளர்கள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்தினர். இருவரும் சண்டையிட்ட வீடியோ நேற்று மாலை வெளியாகி இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இதற்கிடையே, பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஊழியர் மட்டுமல்லாது, இந்த வீடியோவை எடுத்த ஊழியரையும் இண்டிகோ விமான நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட பயணியிடம் மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே மன்னிப்பு கேட்டதாக இண்டிகோ நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜு, இண்டிகோ நிறுவனத்திடம் விரிவான அறிக்கை கோரியுள்ளார்.