சஸ்பெண்டு 
செய்திகள்

கோவையில் ஓய்வுபெறும் நாளில் டி.எஸ்.பி சஸ்பெண்டு

கோவையில் நேற்று ஓய்வுபெறுவதாக இருந்த டி.எஸ்.பி.யை டி.ஜி.பி. திரிபாதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

கோவை:

கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாக வேலை பார்த்து வந்தவர் ராமகிருஷ்ணன்(வயது58).

இவர் நேற்றுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில் அவரை நேற்று டி.ஜி.பி. திரிபாதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

ராமகிருஷ்ணன் சேலம் குற்றப்பிரிவில் பணியாற்றிய போது அவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் வந்தன. அத்துடன் அவர் குற்றவாளிகளுடன் சேர்ந்து சுற்றுவதாகவும் தகவல் வந்தது.

மேலும் அவர் மீது ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கும் புகார் அனுப்பப்பட்டது. அங்கு விசாரணை நடந்து வந்த நிலையில் தான் அவர் பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

துறை ரீதியான விசாரணை முடியும் வரை இவரது பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்படும் என்றும், அதுவரை அவரது பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பணியிடை நீக்க உத்தரவு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.