சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் ஏறி விபத்தை ஏற்படுத்தியது.
பணிமனையில் இருந்து கடற்கரை நிலையத்திற்கு காலி பெட்டிகளுடன் என்ஜின் டிரைவர் கொண்டு வந்தபோது ஏற்பட்ட விபத்தில் எவ்வித உயிர் இழப்பும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் துறை ரீதியான விசாரணையும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தொடர்புடைய துறைகளை சார்ந்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் விபத்து குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த விபத்து என்ஜின் டிரைவரின் கவனக்குறைவால் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனை ரெயில்வே அதிகாரிகள் மறுத்தனர்.
விபத்துக்குள்ளான ரெயில் யார்டில் இருந்து நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதால் பணிமனையில் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து விசாரிக்கப்படுகிறது.
யார்டு பொறுப்பாளர், தொழில்நுட்ப ஊழியர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. ‘பிரேக்’ பிடிக்கவில்லை என்றால் அதற்கு பணிமனை பொறுப்பாளர் தான் காரணம் என்றும், அவரது ஆய்வுக்கு பிறகு தான் ரெயில் இயக்குவதற்காக கொண்டு செல்லப்பட்டது என்றும் அதனால் எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்பதை அதிகாரிகள் ஒவ்வொன்றாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
என்ஜினை இயக்கும் டிரைவர் 15 வருடம் அனுபவம் உள்ளவர். அவர் மது அருந்திவிட்டு இயக்குவதற்கும், செல்போனை பயன்படுத்தியவாறு இயக்குவதற்கும் வாய்ப்பு இல்லை.
இந்த சோதனைக்கு பிறகு தான் அவர் என்ஜினை கொண்டு செல்லவே அனுமதிக்கப்படுகிறார். அதனால் விபத்து ஏற்பட காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும். துறை ரீதியிலான விசாரணை நடத்தி அறிக்கையும், குழு நடத்திய விசாரணை அறிக்கையும் பாதுகாப்பு அதிகாரி வழியாக சென்னை கோட்ட மேலாளருக்கு அனுப்பப்படும்.
இந்த விசாரணை ஒரு வாரத்தில் முடித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. குறைந்தது 3 மாதம் ஆகும் என்று தெரிகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வியாசர்பாடி ரெயில் விபத்து குறித்து இதுவரையில் எந்த முடிவையும் ரெயில்வே துறை அறிவிக்கவில்லை. அந்த வரிசையில் கடற்கரை ரெயில் நிலைய விபத்தும் இடம்பெறும் என்றே தெரிகிறது.
இதையும் படியுங்கள்... சென்னையின் 2வது விமான நிலையம்- பண்ணூர், பரந்தூரில் அமைக்க மத்திய குழு விரைவில் ஆய்வு