search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol"

    • பெட்ரோல் இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
    • மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம் காரணமாக சைக்கிள் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.

    மதுரை:

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு சிலர் தங்களது இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தனர்.

    அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் போது அதில் முறைகேடு நடப்பதாகவும், ஒரு லிட்டர் பெட்ரோலில் 100 மில்லி அளவிற்கு பெட்ரோல் போடாமலே பெட்ரோல் போடப்பட்டதாக கணக்கு காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதனையடுத்து அந்த இளைஞர்கள் சிலர் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு சென்று அங்கு குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிலையில் அங்குள்ள அளவீடு மானி மூலமாக பெட்ரோலை நிரப்ப கூறி, அதன்படி நிரப்பிய போது ஒவ்வொரு லிட்டரிலும் 100 மில்லி அளவு குறைவாக எடுப்பது தெரியவந்தது.

    இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்தபோதே பெட்ரோல் பங்க் ஊழியர் உடனடியாக எந்திரத்தில் மாற்றம் செய்தார். இதனையும் வீடியோ எடுத்த நபர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இந்த பெட்ரோல் பங்க் முறைகேடு குறித்து மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் இளைஞர்கள் சிலர் புகார் அளித்த நிலையில் அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    திரவ தங்கம் என அழைக்கப்படும் பெட்ரோல் இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய தேவையாக உள்ளது. வாகனங்களின் இயக்கத்துக்கு முக்கிய காரணியாக உள்ள பெட்ரோலை சாமானியர்கள் முதல் முதலாளிகள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம் காரணமாக சைக்கிள் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.

    சாதாரண வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பலதரப் பினரும் வெளியே செல்ல மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அவரவர் வசதிக்கேற்ப ரூ.50 முதல் தங்கள் வாகனங்களில் பெட்ரோல் போட்டு வருகின்றனர். ஆனால் அதிலும் தற்போது முறைகேடு புகார் எழுந்துள்ளது. சாமானியர்கள் உழைத்து அதில் ஒரு குறிப்பிட்ட தொகை பெட்ரோலுக்கே செலவழித்து வரும் நிலையில் அதன் அளவையும் குறைத்து விநியோகிக்கப்படுவது பொதுமக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    நுகர்வோர்களுக்கு சரியான அளவில் சரியான விலையில் பொருட்கள், சேவைகள் கிடைக்க வேண்டும் என பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனால் பெட்ரோல் அளவில் குறைத்து நடக்கும் இந்த நூதன முறைகேட்டை தடுக்க வேண்டும். பெட்ரோல் பங்கில் நுகர்வோர்களுக்கு சரியான பெட்ரோல் அளவை வழங்குவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும்.
    • பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாயைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது லிட்டருக்கு 2 ரூபாய் என்றாலும் அது சாதாரண மக்கள் மீதுள்ள பணச்சுமையைக் குறைக்க உதவும். அது மட்டுமல்ல வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும். குறிப்பாக நாடு முழுவதும் எவ்வித பாகுபாடின்றி பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும். மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை நிரூபிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை பாராட்டி, வாழ்த்தி, நன்றி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 663 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
    • பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    இதற்கிடையே, தொடர்ந்து 663-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது.

    இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என பெட்ரோலியத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.

    • பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது
    • பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம்

    பெட்ரோல், டீசல், மின்சார கார்களின் காற்று மாசு குறித்து 'எமிஷன் அனலைடிக்ஸ்' (Emission Analytics)என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் மின்சார கார்களில் அதிக காற்று மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல், கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக காற்று மாசு துகள்களை வெளியிடுகிறது. அதன் டயர்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் மற்றும் பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது. அரை டன் பேட்டரி மின்சார வாகனத்தில் இருந்து வெளியாகும் மாசு, பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.

    மின்சார வாகனங்கள் காற்றுமாசை குறைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசை விட, எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து தான் அதிக காற்று மாசு வெளியேறுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

    எனவே, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன.

    பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிக மாசை வெளியேற்றுவதாக கூறி மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது வெளியான இந்த ஆய்வு முடிவால் வாகன ஓட்டிகள், நுகர்வோர்கள் கடும் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரி காஞ்சிபுரம் வந்தார்.
    • அதிகாரிகளுடன் அதிகார பத்திரம் தாமதம் குறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    திருத்தணி:

    காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராமேஸ்வரி. இவர் மலேசியாவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை நிர்வகிக்க உரிமை கோரும் அதிகாரத்தை திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு வழங்க ராமேஸ்வரி முடிவு செய்தார்.

    இதற்காக திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தார். இதற்காக அனைத்து சான்றுகளும் பதிவேற்றப்பட்ட நிலையில், காயத்ரிக்கு வழங்கும் அதிகாரம் கோரும் பத்திரத்தை அதிகாரிகள் வழங்காமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரி காஞ்சிபுரம் வந்தார். அதிகார பத்திரம் குறித்து கேட்டபோது பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ராமேஸ்வரி திருத்தணி பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். அவர் அங்கிருந்த அதிகாரிகளுடன் அதிகார பத்திரம் தாமதம் குறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சர்வர் பழுது காரணமாக அவருக்கு உரிய அதிகார பத்திரம் வழங்க முடியவில்லை என்றனர்.

    • மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என டிரைவர்கள் போராட்டம் அறிவித்தனர்.
    • இதனால் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    சென்னை:

    மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என டிரைவர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மகாராஷ்டிரா மாநிலத்தில், முன்னெச்சரிக்கை காரணமாக வாகனங்களில் முழுமையாக எரிபொருளை நிரப்பிக் கொள்ள பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுத்துள்ள நிலையில் உள்ளனர். இதனால் கடும் கூட்டம் கூடி வரும் நிலையில் எரிபொருள் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நாசிக்கில் டேங்கர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றால் பெட்ரோல் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என அந்த மாவட்டத்தின் பெட்ரோல் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார்.

    வட மாநிலங்களில் லாரி டிரைவர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது. சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர்.

    • மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.
    • மலர் வேந்தன், வேல் குமார், சிவராம், கலையரசன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    வடசென்னை கிழக்கு மாவட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதி புழல் ஒன்றியத்தில் உள்ள விளாங்காடுப்பாக்கம் ஊராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்தினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன் ஏற்பாட்டில் நிவாரண உதவியாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் புழல் பெ.சரவணன் தலைமையில் நடந்த இந்த விழாவில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.

    ஒன்றிய தலைவர் செல்வ மணி, துணைத் தலைவர் சாந்தி பாஸ்கரன், தங்கராஜன், காமராஜ், மல்லி ராஜா, பரிமளச் செல்வம், எழிலன், கபிலன், அருண், ராமு, திருநாவுக்கரசு, அப்போஸ், டில்லி பாபு, கோவிந்தராஜ், சதிஷ், நாகராஜ், வெங்கடேசன், அஜித்குமார், ராஜேஷ், சீனிவாசன், சீனு, இளைஞர் அணி தனுஷ் சரவணன், ரோகேஷ், சரவணன், செல்வகுமார், விமல், பிரேம்குமார், வார்டு உறுப்பினர் சத்யசீலன், ரதி சீனிவாசன், நிலவழகி இனியன், அருணாதேவி, சீனு, ஆனந்தி நாகராஜன், தர்மிரவி, நாம தேவன், அசோக், அப்பன் ராஜ், மலர் வேந்தன், வேல் குமார், சிவராம், கலையரசன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.
    • பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை.

    அரூர்:

    தருமபுரி மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அரூரில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் தமிழரசன் அரூருக்கு வருகை தந்தார்.

    முன்னதாக செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதில் கடந்த 10 நாட்களுக்கு மேல் சென்னை மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளிலும் கடலூர் தொகுதிகளிலும் எதிர்பாராத அளவிற்கு கடும் மழை புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    வீடுகளில் தண்ணீர் புகுந்து, பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.


    பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை. எனவே, நிவாரண பணிகளை உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு ரேசன் கார்டு தாரர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி வலியுறுத்துகிறது.

    இனிவரும் காலங்களிலே இப்படிப்பட்ட அவலங்கள் ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வுகளை காண நல்லத்திட்டங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    திருமாவளவன் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு வழக்கறிஞர் பணிக்கு உள்இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்றதால் தள்ளுபடி செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து இப்போது இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசிலும் இது நடக்கவில்லை. கேட்டால் இதற்கு சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள். இப்போது மாநில அரசு வழங்குகிற இட ஒதுக்கீடு 18 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 1 சதவீதம் பழங்குடியின மக்களுக்கு 1969 முதல் வழங்கப்படுகிறது.

    தற்போது அரை நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில் மக்கள் தொகை கூடிவிட்டது, ஆகையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 19சதவீதமும், குறைந்தபட்சம் 22 சதவீதமும், மலைவாழ் மக்களுக்கு 1 சதவீதம் குறைந்தபட்சம் 2சதவீதம் ஆக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.

    தி.மு.க. அரசுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான உண்மையான சமூக கல்வி பொருளாதார இந்த வளர்ச்சியில் அக்கறை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
    • 3 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெள்ளம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் வடிந்து விட்டதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    வெள்ளம் மற்றும் வெள்ளத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. காயம் அடைந்தவர்களுக்கு 'டெட்டனஸ் டாக்சாய்டு' செலுத்தப்படுகிறது. மேலும் மேல்நிலை தொட்டிகள், சம்புகளில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பதற்கு சுகாதாரத்துறை மூலம் பிளீச்சிங் பவுடர் வழங்கப்படுகிறது.

    வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற மழை நீர் மற்றும் நோய் கிருமிகளால் பரவும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.


    பொதுமக்கள் இந்த சமயத்தில் பாதுகாப்பான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது. தொற்று நோய்களை தடுக்க சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

    வெள்ளத்தில் நனைந்த உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. யாருக்காவது காய்ச்சல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம் உள்ளிட்ட அரசு சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தனியார் டேங்கர் லாரி, திறந்த வெளி குளங்கள், கிணறுகளில் வெள்ள நீர் கலந்து இருக்க வாய்ப்பு இருப்பதால் அவற்றை குடிப்பது பாதுகாப்பானது அல்ல.

    சரியான அளவு குளோரின் உள்ள தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும். குப்பை மற்றும் அழுகும் பொருட்களில் ஈக்கள் பெருகும். எனவே கழிவுகளை உடனே அகற்ற வேண்டும். இறந்த விலங்குகள் அல்லது பறவைகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 9 மாதம் முதல் 15 வயது உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முந்தைய நோய் தடுப்பு நிலையை பொருட்படுத்தாமல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியை ஒரு டோஸ் கொடுக்க வேண்டும். இது குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இன்று 3 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. எலி காய்ச்சல், காலரா மற்றும் பிற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க மக்கள் காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும். "டாக்னிகள்" என்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையை சாப்பிட்டால் காய்ச்சல், தொற்று நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். அனைத்து மருத்துவ முகாம்கள், சுகாதார நிலையங்களில் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது. பொது மக்கள் சுகாதாரத்துறையின் அறிவுரைகளை பின்பற்றினால் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் வெள்ளத் தடுப்பு தொடர்பான கட்டமைப்புகளை அரசு முறையாக செய்துள்ளது.
    • மழை பாதிப்பில் இருந்து மீண்டு வர போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    சென்னை:

    புயல், மழை வெள்ளத்தில் சிக்கி தலைநகர் சென்னை தத்தளித்தது. இன்னும் முழு அளவில் மக்கள் இயல்பு நிலைக்கு மீளவில்லை.

    கடந்த 8 ஆண்டுகளில் 3 பெரு வெள்ளத்தை சென்னை மக்கள் சந்தித்து பெரும் துயரை அனுபவித்து உள்ளார்கள். வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக பல கோடிகளை செலவிட்டு உள்ளதாக அரசு கூறினாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடுமையாக அரசை குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் நடை பெறும் 3000 மழைக்கால மருத்துவ முகாமில் சென்னையில் நடைபெற்ற முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.


    அப்போது அவரிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    சென்னையில் வெள்ளத் தடுப்பு தொடர்பான கட்டமைப்புகளை அரசு முறையாக செய்துள்ளது. இதில் நாங்கள் செய்தது தான் சரி. 20 செ.மீட்டர் மழையை தாங்கும் அளவுக்கு கட்டமைப்புகள் வலுவாக இருக்கிறது. ஆனால் ஒரே நாளில் 50 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. அது மட்டுமல்ல 4-ந்தேதி அடையாறு முகத்துவாரத்தை நேரில் பார்த்தேன். மழை தண்ணீரை கடல் உள்வாங்கவில்லை.

    மழை பாதிப்பில் இருந்து மீண்டு வர போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    வெள்ளத்தடுப்பு பணிகளில் தி.மு.க. அரசு எதிலும் கோட்டை விடவில்லை. எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்பட யாருடனும் நான் நேரில் விவாதிக்க தயாராக உள்ளேன். அவர்கள் தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடசென்னையில் 14 இடங்களும், தென்சென்னையில் 21 இடங்களும் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது.
    • தண்ணீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையை புரட்டிப் போட்ட 'மிச்சாங்' புயல் மழையால் 5 நாட்கள் ஆகியும் வெள்ளம் ஒரு சில பகுதிகளில் வடியவில்லை. வடசென்னை மற்றும் தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக மீட்கவும், தண்ணீரை வெளியேற்றவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    வெள்ளம் பாதித்த பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வடிந்துவிட்டது. தாழ்வான பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெள்ளம் வெளியேற்றப்பட்டது. மீத முள்ள பகுதிகளில் இரவு, பகலாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று இரவு வரை 97 பகுதிகளில் வெள்ளம் நீர் வடியாமல் இருந்தது. இன்று காலையில் அது 56 ஆக குறைந்தது. சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. அதில் 300-க்கும் குறைவான தெருக்களில் மட்டுமே இன்னும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளம் வடியாத பகுதிகளில் கூடுதல் மோட்டார் பம்ப் செட்டுகள், அமைக்கப்பட்டு வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் 363 பகுதிகளில் வெள்ளம் வடியாமல் இருந்தது. விடிய, விடிய நடந்த நடவடிக்கையின் மூலம் 328 இடங்களில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் 35 பகுதிகளில் மட்டுமே வெள்ளம் வடியாமல் உள்ளது. அதனை இன்று இரவுக்குள் வெளியேற்றி விடுவோம். நிலைமை சீராகி விடும்.

    வடசென்னையில் 14 இடங்களும், தென்சென்னையில் 21 இடங்களும் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. அனைத்து சுரங்கப்பாதையிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. 1178 மோட்டார் பம்புகள் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போர்க் கால அடிப்படையில் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.

    தண்ணீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்கள் தவிர பிற பகுதிகள் அனைத்திற்கும் மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.

    டிவிசன்கள் 7, 19, 20, 23, 29, 30, 34, 53, 151, 156, 174, 177, 189, 181, 183, 193, 198 ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் இருந்து வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 25 ஆயிரம் லாரிகள் தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துள்ளது.

    சேலம்:

    மிச்சாங் புயலால் கடந்த 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் சென்னைக்குள் செல்லும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பால், காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    தற்போது சென்னையின் புறநகர் பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளுக்கு லாரிகள் செல்ல தொடங்கி உள்ளன. இதனால் சேலத்தில் இருந்து சென்னையில் புறநகர் பகுதிகளுக்கு கியாஸ் சிலிண்டர்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இதே போல நாமக்கல்லில் இருந்து முட்டைகள், கறிக்கோழிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இதனால் தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்ட 60 ஆயிரம் லாரிகளில் 35 ஆயிரம் லாரிகள் தற்போது ஓட தொடங்கி உள்ளன. மேலும் 25 ஆயிரம் லாரிகள் தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதனை நம்பி உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

    இதனால் சென்னையில் மேலும் பல பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்ட அந்த லாரிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது .

    மேலும் கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துள்ளது. இதனால் அந்த லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி நிறுவனங்கள் இலவச வாகன சரிபார்ப்பு முகாம்கள் நடத்தி வாகனங்களை இலவசமாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×