search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எச்.டி.ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
    X

    எச்.டி.ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

    • எச்.டி.ரேவண்ணா மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்தார்
    • எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., ஆகியோர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்தார்.

    இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண், பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக எச்.டி.ரேவண்ணாவின் உறவினரான சதீஸ் பாபுவை போலீசார் கைது செய்திருந்த நிலையில், எச்.டி.ரேவண்ணா முன்ஜாமீன் கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இருக்கும் இடத்தை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் உடனடியாக அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர்.

    இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த சில நிமிடத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தது.

    அவரை அரண்மனை சாலையில் உள்ள கார்ல்டன் கட்டிடத்தில் இயங்கி வரும் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் பாலியல் புகார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை கடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா குறித்தும் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ரேவண்ணாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு பெங்களூரு 17வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×