பொங்கல் பரிசு தொகையை மது குடிக்க தராததால் தாயை அடித்து கொன்ற மகன் கைது

திண்டுக்கல் அருகே மது குடிக்க பணம் தராததால் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள தோப்புபட்டியைச் சேர்ந்த முத்து மனைவி முத்தம்மாள் (வயது 72). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். 2-வது மகனான ரத்தினவேல் (40), தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இவர் அடிக்கடி தனது தாய் முத்தம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். அதே போல் நேற்று முத்தம்மாள் ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500 வாங்கியதாக ரத்தினவேல் அறிந்தார். இதனையடுத்து அந்த பணத்தை தனக்கு மது குடிக்க தருமாறு கேட்டார். ஆனால் முத்தம்மாள் தர முடியாது என கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த ரத்தினவேல் தாய் என்றும் பாராமல் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார். இதில் பலத்த காயமடைந்த முத்தம்மாள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com