பணகுடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

பணகுடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மாணவி சத்தியா
மாணவி சத்தியா
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. மாவட்டத்தில் பரவலாக இந்த காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் 13-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு மட்டுமல்லாமல் வைரஸ் காய்ச்சல், டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளும் அதிகம் உள்ளன.

டெங்குவை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. டெங்கு பாதித்தவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பணகுடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி ஒருவர் பலியானார்.

பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் சத்தியா(வயது 14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சத்தியாவுக்கு காய்ச்சல் பாதிப்பு உண்டானது. பணகுடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் சத்தியா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பணகுடி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சுகாதார துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com