

லாலாப்பேட்டை:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி பகுதியை சேர்ந்தவர் பிருத்திவிராஜ். இவரது மகள் பூஜா (வயது 5). கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட பூஜாவை அவரது பெற்றோர் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், திருச்சி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. நேற்று இரவு பூஜாவுக்கு காய்ச்சல் மிகவும் அதிகமானது. இதையடுத்து அவளை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது பூஜாவுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பூஜா பரிதாபமாக இறந்தாள்.
டெங்கு காய்ச்சலால் சிறுமி பூஜா பலியான சம்பவம் மணவாசி பகுதி பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.
இதனால் தான் பூஜா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளாள் என்று கூறி மணவாசி மயானம் அருகே, கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பூஜாவின் உடலை வைத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு மாயனூர் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 277 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. இதில் 4 பேர் சிறுவர்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தனிப்பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.