search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் - ஆதார் இணைக்க கால அவகாசத்தை மார்ச் வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X

    செல்போன் - ஆதார் இணைக்க கால அவகாசத்தை மார்ச் வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    ஆதார் இணைப்பு தொடர்பாக அரசியல் சாசன அமர்வு பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் வரும் மார்ச் 31-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள ஒவ் வொருவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

    வங்கிக்கணக்குகள், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான ரொக்க பரிமாற்றங்கள், செல்போன் இணைப்புகள், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஆக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஆனால் ஆதார் திட்டம், அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதல்ல என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகளை தொடுத்து உள்ளனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் 17-ந் தேதி முதல் விசாரிக்க உள்ளது.

    இதற்கிடையே அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயம் ஆக்கி இருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு பல்வேறு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுத்துள்ளனர்.
    இந்த வழக்குகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வின் முன் விசாரிக்கப்பட்டு வந்தன.

    இந்த அமர்வின் முன் மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, வங்கிக்கணக்குகள் உள்ளிட்டவற்றில் ஆதார் எண் இணைப்பதற்கு டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள் என்பதை 2018-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட இருப்பதாக தெரிவித்தார்.

    அதன்படி நேற்றுமுன்தினம் இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. அதே நேரத்தில் செல்போன் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 6-ந் தேதி என்பதில் இருந்து நீட்டிக்கப்படுமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இது தொடர்பாக கூறிய அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், செல்போன் - ஆதார் இணைப்புக்காக காலக்கெடுவை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட்டுதான் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பான விசாரணை முடிவுற்று இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.

    அதன்படி, இன்று காலை அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் இன்று காலை 11 மணிக்கு உத்தரவுகளை வெளியிட்டனர்.

    அப்போது அரசின் நலத் திட்ட உதவிகள், மானியம் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31-ந்தேதி வரை கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து மத்திய அரசு கூறியதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். மேலும், ஆதாருடன் செல்போன் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தையும் நீதிபதிகள் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

    இவை தவிர அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க பொது மக்களை மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் இடைக்கால தீர்ப்பளித்தனர். மக்களின் விருப்பத்தின் பேரில்தான் ஆதாருடன் மற்ற சேவைகள்
    இணைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    ஆதார் அட்டை இல்லாமல் புதிய வங்கி கணக்குகள் தொடங்கலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், அதற்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளனர். அதாவது ஆதார் அட்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளதற்கான அத்தாட்சி சான்றிதழை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவு காரணமாக தற்போதைக்கு ஆதார் எண்ணுடன் மற்ற சேவைகளுக்கான எண்களை இணைக்க வேண்டியதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இது தற்காலிக தீர்வாகும்.

    அடுத்த மாதம் (ஜனவரி) 17-ந்தேதி ஆதார் எண் இணைப்பு கட்டாயத்திற்கு எதிரான வழக்குகள் மீதான இறுதி விசாரணை தொடங்க உள்ளது. அது முடிந்த பிறகே ஆதார் இணைப்பு கட்டாயம் நிரந்தரமாக்கப்படுமா அல்லது தடுத்து நிறுத்தப்படுமா என்பது உறுதியாக தெரியவரும்.

    சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து இருப்பவர்கள், வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் நம்பருடன் ஆதாரை இணைக்க கட்டாயப்படுத்துவது சட்ட விரோதம். மேலும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று வலியுறுத்தியுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு இதை ஏற்குமா என்பது இறுதி கட்ட விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.
    Next Story
    ×