search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டாலின் தலைமையில் ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள்: பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணிக்கு அச்சாரம்
    X

    ஸ்டாலின் தலைமையில் ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள்: பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணிக்கு அச்சாரம்

    கோவையில் இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவில் திருநாவுக்கரசர், திருமாவளவன், ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றிருப்பது பாரதிய ஜனதாவுக்கு எதிரான கூட்டணிக்கு அச்சாரமாக கருதப்படுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க தி.மு.க.வும், காங்கிரசும் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றன.

    இதனை உறுதிபடுத்தும் விதத்தில் முரசொலி பவள விழா நடந்தது. இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் திரண்டனர். இதன்முலம் தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வலுவான கூட்டணியை அமைக்கப் போவது உறுதியானது.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடி, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதற்காக வெளிநாடு சென்றிருந்த மு.க.ஸ்டாலின் அவசரம் அவசரமாக சென்னை திரும்பினார்.

    மோடியின் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் கருணாநிதியுடனான சந்திப்பு கடைசி நேரத்திலேயே சேர்க்கப்பட்டது. இது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்தது. தமிழகக்தில் காலூன்று வதற்கு பாரதிய ஜனதா, தி.மு.க. மீதும் ஒரு கண் வைத்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். இது தி.மு.க. கூட்டணி கட்சிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    மோடி கருணாநிதியுடனான இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் இல்லை என்று தி.மு.க. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    வருகிற தேர்தலில் திமு.க.வோடு கைகோர்க்க தயாராகி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தி.மு.க.வை சந்தேக கண்ணோடு பார்த்தார். மோடி கருணாநிதி சந்திப்பு பல்வேறு யூகங்களுக்கு வழி ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.

    இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையில் இந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை காங்கிரஸ் நடத்தியது.



    இந்த கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி,

    சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அப்துல்பாசித், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து, தி.க. பொருளாளர் பிறைநூதல் செல்வி, ஆதிதமிழர் பேரவை அதியமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.வான தமிமுன் அன்சாரியும் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, “மத்தியில் பா.ஜனதா தலைமையிலான அரசு அகற்றப்பட வேண்டும்” என்றார். பாரதிய ஜனதா பக்கம் அ.தி.மு.க. சேரும்போது அவரது மனிதநேய ஜனநாயக கட்சியும் தி.மு.க. பக்கம் சாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையில் நேற்று நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் ஒன்று சேர்த்துள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

    மோடி மீண்டும் பிரதமரானால் தேசத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று கூறிய அவர் மத்தியில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

    இதன் மூலம் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி சேரப்போகிறதா? என்கிற சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவை காலூன்ற விட்டு விடக்கூடாது என்றே இக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும் குரல் எழுப்பினர்.

    பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க. தலைமையில் அமையப்போகும் கூட்டணிக்கு அச்சாரமாகவே இது பார்க்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதத்திலேயே மு.க.ஸ்டாலின், திருமாவளவன், தா.பாண்டியன் ஆகியோரது பேச்சுக்களும் அமைந்திருந்தன.
    Next Story
    ×