search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. பிளவுபட்டதால் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
    X

    அ.தி.மு.க. பிளவுபட்டதால் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்

    அ.தி.மு.க. இரு அணியாக பிளவுபட்டதால் தற்போது தேர்தல் நடந்தால் அ.தி.மு.க.வை விட தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    நாடு முழுவதும் தற்போது மக்கள் மனநிலை எப்படி உள்ளது என்று இந்தி தொலைக்காட்சி சானல் ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியது.

    இப்போது பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடத்தினால், மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்? மாநிலங்களில் எந்தெந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ளது? என்று அந்த கருத்துக் கணிப்பில் ஆய்வு செய்யப்பட்டது.

    அந்த கருத்துக் கணிப்பில் தற்போது தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டால் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்திய சி.எஸ். டி.எஸ். அமைப்பின் இயக்குனர் பேராசிரியர் சஞ்சய் குமார் கூறியதாவது:-

    ஜெயலலிதா மரணத்தால் அ.தி.மு.க. பலவீனமாகி உள்ளது. அந்த கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு அந்த கட்சிக்கு மேலும் இழப்பாக மாறியுள்ளது. இதனால் பொதுவான மக்களின் ஆதரவு தி.மு.க. நோக்கி திரும்பத் தொடங்கி உள்ளது.

    தற்போது தேர்தல் நடந்தால் அ.தி.மு.க.வை விட தி.மு.க.வுக்கு கூடுதல் தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். எனவே தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

    பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடத்தும் பட்சத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு கடந்த தடவை விட இந்த தடவை கூடுதல் இடங்கள் கிடைக்கும். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தொகுதிகள் கணிசமாக அதிகரிக்கும்.

    தமிழ்நாட்டில் மாநில கட்சிகள் வலுவான நிலையில் உள்ளன. எனவே பா.ஜ.க.வுக்கு கூடுதல் இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இல்லை. என்றாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ந்து இருப்பது உறுதியாகி உள்ளது.

    பாராளுமன்றத்துக்கு தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். என்றாலும் எம்.பி.க்கள் எண்ணிக்கை பா.ஜ.க.வுக்கு குறைந்து விடும்.

    2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 336 தொகுதிகள் கிடைத்திருந்தன. தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜ.க. கூட்டணிக்கு 331 இடங்களே கிடைக்கும்.

    பிரதமர் மோடி மீதான ஈர்ப்பு நாடெங்கும் மக்களிடம் தொடர்ந்து நீடிக்கிறது. மோடியின் செயல்பாடுகளால்தான் மக்களிடம் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்தபடி உள்ளது.

    ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பால் பா.ஜ.க.வின் செல்வாக்கு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. விவசாயிகளிடம் மட்டும் நாடு முழுவதும் அதிருப்தி அலை வீசுகிறது.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 60 தொகுதிகளே கிடைத்தன. தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் இந்த எண்ணிக்கை 104 ஆக உயரும்.

    பீகாரில் நிதீஷ்குமார்- லல்லு பிரசாத்தின் மெகா கூட்டணி, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் போன்றவை காரணமாக காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதலாக 44 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் பல புதிய தொகுதிகள் கிடைக்கலாம்.

    இவ்வாறு பேராசிரியர் சஞ்சய்குமார் கூறினார்.
    Next Story
    ×