ஆரணி அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி

ஆரணி அருகே மர்ம காய்ச்சலுக்கு 1 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான தினேஷ்
பலியான தினேஷ்
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கஷ்டம்பாடி ஊராட்சி வல்லுவன் நகரை சேர்ந்தவர் விஜய். கூலித் தொழிலாளி. இவரது 1 வயது ஆண் குழந்தை தினேஷ். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குழந்தை தினேஷூக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது.

காய்ச்சலால் குழந்தை அவதிப்பட்டு வந்தது.பெற்றோர் குழந்தையை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். குழந்தை தினேஷை பரிசோதித்த டாக்டர்கள், ரத்தத்தில் மர்ம காய்ச்சல் தொற்று இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, உரிய சிகிச்சைக்காக குழந்தையை களம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த அரசு டாக்டர்கள் டெங்கு அறிகுறி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து மருந்து கொடுத்துள்ளனர். மருந்து உட்கொண்டும், குழந்தைக்கு காய்ச்சல் குறையவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காக குழந்தை தினேஷ், களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே அனுமதிக்கப்பட்டான்.

அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தது. இதேபோல், கஷ்டம்பாடி வல்லுவன் நகரை சேர்ந்த வசந்தி (16) என்ற சிறுமி, சாந்தி (55) உள்பட மேலும் 6 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6 பேரும் களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மர்ம காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். குழந்தை தினேஷ் உயிரிழந்ததையடுத்து, 6 பேரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று மாற்றப்பட்டுள்ளனர்.

கஷ்டம்பாடி கிராமத்தில் மர்ம காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் பரவாமல் தடுக்க மருத்துவக் குழுவினர் முகாமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com