

ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த அபார வளர்ச்சி விண்வெளித் துறையை மட்டுமின்றி, பூமியில் வாழும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையையும் நேரடியாக பாதிக்கிறது.
விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனித குலத்தின் விண்வெளி சாதனைகளை நினைவுகூரும் வகையில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் உலக விண்வெளி வாரம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டின் விண்வெளி வாரம், விண்வெளித் துறையில் உலகளவில் நிகழ்ந்து வரும் மிகப்பெரிய மாற்றங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 வரை உலக விண்வெளி வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. விண்வெளி வரலாற்றில் தடம் பதித்த இரண்டு மிக முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் இந்தத் தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 4, 1957 ம் ஆண்டு மனிதகுலத்தின் முதல் செயற்கைக்கோளான 'ஸ்புட்னிக் 1' விண்வெளியில் ஏவப்பட்டு, விண்வெளி ஆராய்ச்சிக்கான கதவைத் திறந்தது.
அக்டோபர் 10, 1967ம் ஆண்டு அமைதியான முறையில் விண்வெளியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் 'வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம்' அமலுக்கு வந்தது. இவ்விரண்டு முக்கிய நிகழ்வுகளின் வரலாற்று சிறப்பை முன்னிட்டு, 1999-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அக்டோபர் 4 முதல் 10 வரையிலான நாட்களை உலக விண்வெளி வாரமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
2026-ஆம் ஆண்டிற்கான உலக விண்வெளி வாரத்தின் முக்கியக் கருப்பொருள் 'ராக்கெட் புரட்சி' என்பதாகும். முன்பெல்லாம் அரசு சார்ந்த விண்வெளி அமைப்புகள் மட்டுமே ராக்கெட்டுகளை இயக்கி வந்த நிலையில், தற்போது தனியார் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் அமைப்புகள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எனப் பல தரப்பினரும் விண்வெளித் துறையில் கால்பதித்து வருகின்றனர். மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் மற்றும் குறைந்த செலவிலான ஏவுதளத் தொழில்நுட்பங்கள் வாயிலாக விண்வெளிப் பயணம் புதிய வேகத்தையும் எளிமையையும் பெற்றுள்ளது. இந்த மிகப்பெரிய தொழில் நுட்பப் பாய்ச்சலையே 'ராக்கெட் புரட்சி' என்ற கருப்பொருள் சுட்டிக்காட்டுகிறது.
ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த அபார வளர்ச்சி விண்வெளித் துறையை மட்டுமின்றி, பூமியில் வாழும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையையும் நேரடியாகப் பாதிக்கிறது. ஒருமுறை விண்வெளிக்குச் சென்றுவிட்டு மீண்டும் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பி வந்து, பலமுறை பயன்படுத்தப்படும் ராக்கெட்டுகள் ஏவுதல் செலவை பெருமளவில் குறைத்துள்ளன.
குறைந்த செலவில் அதிக ராக்கெட்டுகள் ஏவப்படுவதால், தகவல் தொடர்பு, வழிசெலுத்தல், வானிலை கணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான செயற்கைக்கோள்களை எளிதில் விண்ணில் நிலைநிறுத்த முடிகிறது. விண்வெளித் துறையில் இந்தியாவின் பயன்பாடும், இஸ்ரோ அமைப்பின் 'ககன்யான்' போன்ற மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களும் இந்த உலகளாவிய ராக்கெட் புரட்சியில் இந்தியாவை ஒரு முக்கிய சக்தியாக மாற்றியுள்ளன.
உலக விண்வெளி வாரம் என்பது கடந்தகால சாதனைகளைக் கொண்டாடுவதுடன் மட்டுமல்லாமல், வருங்கால தலைமுறையினருக்கு விண்வெளி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வத்தைத் தூண்டுவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளவில் நடைபெறும் ஆயிரக்கணக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விண்வெளி வினாடி-வினாக்கள், மாதிரிகள் உருவாக்கம் மற்றும் அறிவியல் கருத்தரங்குகள் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளை நோக்கி ஊக்குவிக்கப்படுகிறார்கள். 2026-ன் 'ராக்கெட் புரட்சி' கருப்பொருள், வரும் காலங்களில் விண்வெளிப் பயணம் மற்றும் ஆய்வுகள் எவ்வாறு மனித குலத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப்போகின்றன என்பதை உலகிற்குத் தெளிவாக உணர்த்துகிறது.