

டெஸ்லா நிறுவனத்தின் புதிய ரோட்ஸ்டர் மின்சாரக் காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் தொழில்நுட்பத்துடன் காற்றில் எழும்பி, மிதக்கும் மற்றும் சுழலும் திறன் கொண்டதாகக் கூறப்படும் இந்த காரின் வணிக ரீதியான தயாரிப்புப் பணிகள் 2028-ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளன.
இந்த காரை முன்பதிவு செய்ய ஆரம்பக் கட்டணமாக ரூ.5.01 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து 10 நாட்களுக்குள் ரூ. 45.05 லட்சமும் செலுத்த வேண்டும். இதன் மூலம் மொத்த முன்பதிவுத் தொகை ரூ. 50.06 லட்சமாகிறது.
மிகவும் பிரத்யேகமான த்ரஸ்ட் மாடலுக்கு, ஆரம்பக்கட்டணம் அதே ரூ. 5.01 லட்சமாகவே உள்ளது. ஆனால் வாடிக்கையாளர்கள் அதே 10-நாள் காலக்கெடுவிற்குள் கூடுதலாக ரூ. 2,45,24,000 செலுத்த வேண்டும். இதன்மூலம் இந்த மாடல் காரில் மொத்த முன்பதிவுத் தொகை ரூ. 2,50,25,000, அதாவது தோராயமாக ரூ. 2.50 கோடியாகிறது.
இவை அனைத்தும் வெறும் முன்பதிவு கட்டணம் மட்டுமே. இறுதிவிலை குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட ரூ. 5.01 லட்சம் கட்டணம் முழுமையாகத் திரும்பப் பெறக்கூடியது என டெஸ்லா குறிப்பிடுகிறது.
முதல் தொகையை செலுத்தியபின், அடுத்த 10 நாட்களுக்குள் அடுத்தக்கட்ட தொகையை செலுத்தவேண்டும். இல்லையென்றால் முன்பதிவு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
த்ரஸ்ட் மாடல் கார்களை பொறுத்த மட்டும், ஒருவர் ஒன்று மட்டுமே வாங்கமுடியும்.
இந்த ரோஸ்டர் காரிலேயே மூன்று வகையை டெஸ்லா அறிவித்துள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவிலான செயல்திறனையும், தொழில்நுட்பத்தையும் கொண்டவை.
ஒன்று சாதாரண சாலைகளில் ஓட்டக்கூடியது. இவற்றில் த்ரஸ்டர்கள் இருக்காது. அதாவது காற்று உந்திகள் இருக்காது. இதன் முன்பதிவின் மொத்தத்தொகை ரூ.42 லட்சம் வரை வரும்.
இரண்டாவது த்ரஸ்ட் மாடல். அதிவேக முடுக்கத்திற்கான கூடுதல் பூஸ்டர்களைக் கொண்டது. இதன் முன்பதிவு தொகைதான் தோராயமாக ரூ. 2.50 கோடி.
மூன்றாவது ராக்கெட் மாடல். இதுதான் முற்றிலும் பறக்கும் வசதி கொண்ட ஒற்றை இருக்கை காராகும். ஆனால், இதை அனைவரும் வாங்கிவிட முடியாது. டெஸ்லா நிறுவனத்தால் நேரடியாக அழைக்கப்படும் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும்.
ஆனால் இந்த காரின் வணிகரீதியான உற்பத்தி 2028-ஆம் ஆண்டில் தான் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் உள்ள பறக்கும் த்ரஸ்டர் வசதியை பொதுச் சாலைகளில் பயன்படுத்த சட்டப்பூர்வமாக அனுமதி இல்லை.