போட்டியிடுவதில் பிரச்சனை இல்லை.. சீண்டிய எலான் மஸ்க்குக்கு ரிலையன்ஸ் பதில்

சில பெரும் பணக்காரர்கள் தடுப்பதாக அண்மையில் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
மஸ்க், ரிலையன்ஸ்
Published on: 
Summary

ஸ்டார்லிங்க் உட்பட எந்தவொரு நிறுவனத்துடனும் போட்டியிடுவதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைகோள் இணைய சேவை செயல்பாட்டுக்கு வருவதை சில பெரும் பணக்காரர்கள் தடுப்பதாக அண்மையில் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்திய அரசின் இறுதி அனுமதி கிடைப்பதில் பெரும் பணக்காரர்கள் முட்டுக்கட்டை போடுவதாக மஸ்க் தெரிவித்த நிலையில் அதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

தொடர்ந்து மஸ்க், ஜியோ தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அம்பானியை குறிவைத்து விமர்சனம் செய்யத் தொடங்கினார்.

அம்பானியை பிரதமர் என அழைத்து, இந்தியாவில் அவரிடமே அதிகாரம் உள்ளது என பொருள்படும்படி மஸ்க் விமர்சித்தார். மேலும் இந்தியாவில் மலிவான இணைய சேவைகளை கிடைக்கவிடாமல் தடுத்து மக்களை ஏமாற்றுவதாகவும் மஸ்க் கடுமையாக விமர்சித்தார்.

ரிலையன்ஸ் பதில்

இந்த சூழலில் ஸ்டார்லிங்க் உட்பட எந்தவொரு நிறுவனத்துடனும் போட்டியிடுவதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்தியாவில் வணிகம் செய்யும் எந்தவொரு நிறுவனமும் நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசாங்க விதிமுறைகளுக்குக் கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும் என்றும் அந்நிறுவனம் அட்வைஸ் செய்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா முதலீட்டையும் புதிய தொழில்நுட்பத்தையும் வரவேற்கிறது.

இந்திய நிறுவனமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி, சட்ட விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

ஜியோவின் செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்குமே கூட அரசாங்க ஒப்புதல்கள் இன்னும் கிடைக்கவில்லை" என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

​​

ஒரு வாடிக்கையாளர் கூட

ரிலையன்ஸ் தனது அறிக்கையில், " 2016ல் ஜியோ இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்தபோது, ​​ஒரு வாடிக்கையாளர் கூட இல்லை. இருந்தபோதிலும், மலிவு விலை டேட்டா மற்றும் டிஜிட்டல் சேவைகள் மூலம் விரைவாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.

பத்து ஆண்டுகளில் ஜியோவின் வாடிக்கையாளர் தளம் 530 மில்லியனுக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

போட்டியைக் கண்டு அஞ்சுவதற்குப் பதிலாக, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாகவே அதைக் கருதுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

மத்திய அரசு

இதனிடையே இந்தியாவில் செயற்கைக்கோள் இணையத் துறையில் எந்தவொரு நிறுவனமும் ஏகபோக உரிமையைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படாது என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

மூன்று நிறுவனங்கள் வணிக உரிமங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com