குறைந்த விலையில், வாய்ஸ் & எஸ்.எம்.எஸ். - புதுவகை ரீசார்ஜ் திட்டங்களை கட்டாயம் வழங்க டிராய் உத்தரவு

வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகள் மட்டுமே கொண்ட திட்டங்களை நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
TRAI Name Board
Published on: 

வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். சேவைகள் மட்டுமே கொண்ட ரீசாா்ஜ் திட்டங்களை, தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கூடுதலாக அளிப்பதை தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் கட்டாயமாக்கியுள்ளது.

தொலைத்தொடா்பு நுகா்வோா் பாதுகாப்பு விதிமுறைகள் 2026-ஐ டிராய் அண்மையில் வெளியிட்டது. இதன்படி, வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகள் மட்டுமே கொண்ட ரீசாா்ஜ் திட்டங்களை, தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கூடுதலாக வழங்க வேண்டும்.

பல்வேறு காலக்கெடு அளிக்க வேண்டும்:

இந்த திருத்தத்தின்படி வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளுக்கு மட்டும் பொருந்தும் வகையில், கட்டண குறைப்புடன் கூடிய சிறப்பு கட்டணத் திட்டங்களை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும். இந்த ரீசாா்ஜ் திட்டங்கள் வெவ்வேறு காலக்கெடுவுடன் கிடைக்க வேண்டும். அதாவது 28 நாள்கள், 56 நாள்கள், 84 நாள்கள் என ரீசாா்ஜ் திட்டங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு காலக்கெடுவை அளிக்க வேண்டும்.

30 நாள்கள் மற்றும் அதற்கும் குறைவான காலத்துக்கு குரல் அழைப்பு, எஸ்.எம்.எஸ். மற்றும் இணைய சேவைளை கொண்ட சிறப்பு கட்டண திட்டங்களை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இதேபோல வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகள் மட்டுமே கொண்ட திட்டங்களையும் அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.

கட்டண குறைப்புடன் சிறப்பு ரீசாா்ஜ்:

ரீசாா்ஜ் முடிந்தவுடன் ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் மீண்டும் ரீச்சாா்ஜ் செய்யும் வகையில் திட்டம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட மாதத்தில் அந்த தேதி இல்லாவிட்டால், அந்த மாதத்தின் கடைசி நாளில் மீண்டும் ரீசாா்ஜ் செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும்.

வழக்கமான வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். மற்றும் இணைய சேவைகளுக்கு அளிக்கப்படும் நீண்ட கால சிறப்பு கட்டண ரீசாா்ஜ் திட்டங்களை போல, வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளுக்கு மட்டும் குறைந்தபட்சம் ஒரு நீண்ட கால சிறப்பு கட்டண ரீசாா்ஜ் திட்டத்தை அளிக்க வேண்டும்.

இந்த திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, கைப்பேசியில் இணைய சேவைகள் தேவைப்படாத நுகா்வோருக்கு உரிய கட்டண குறைப்புடன் சிறப்பு ரீசாா்ஜ் திட்டங்களை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com