60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு.. மைக்ரோசாப்ட் அறிவிப்பு - சலுகைகள் என்ன?

சுமார் 2,23,000 ஊழியர்களைக் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், இது சுமார் 27 சதவீத ஊழியர்களுக்கு பொருந்தும்.
மைக்ரோசாப்ட்
Published on: 
Summary

60,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெரும் வாய்ப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் முதலீடு செய்து வருகிறது.

இந்நிலையில் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், சுமார் 60,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெரும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள தகுதியான ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திங்களன்று, நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி ஏமி கோல்மன், அதிகாரப்பூர்வ வலைப்பதிவின் மூலம் இது குறித்து ஊழியர்களுக்கு தெரிவித்தார்.

ஆஃபர்

இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை என்றும், இதை ஏற்றுக்கொண்டு வெளியேறும் ஊழியர்களுக்கு நிலையான பணிநீக்க இழப்பீடு, நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிமுறைகள், தொழில் மாற்றத்திற்கான உதவிகள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

நிலை 70 மற்றும் அதற்குக் கீழ் உள்ள ஊழியர்கள் இதற்குத் தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2,23,000 ஊழியர்களைக் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், இது சுமார் 27 சதவீத ஊழியர்களுக்குப் பொருந்தும்.

இருப்பினும், இந்தச் சலுகை அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தாது. நிறுவனத்தின் வணிக முன்னுரிமைகளை பொறுத்து, சில குழுக்களுக்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது.

கோபைலட், கோர்ஏஐ, விண்டோஸ், எக்ஸ்பாக்ஸ், நிதி மற்றும் மனிதவளம் போன்ற துறைகள் இந்தப் பட்டியலில் அடங்கும்.

அதே நேரத்தில், சந்தைப்படுத்தல், வணிகம் மற்றும் பாதுகாப்பு போன்ற சில குழுக்கள் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்பை ஏற்கும் ஊழியர்கள் டிசம்பர் மாதத்திற்குள் தங்கள் முடிவைத் தெரிவிக்க வேண்டும். ஏற்றுக்கொள்பவர்கள் டிசம்பர் 31 அன்று நிறுவனத்தை விட்டு வெளியேறுவார்கள்.

முதலீடு

மைக்ரோசாப்ட், செயற்கை நுண்ணறிவு கணினி மற்றும் கிளவுட் திறனை அதிகரிப்பதற்காக தரவு மையங்களில் பெருமளவில் செலவு செய்து வருகிறது.

இதற்காக 2026 ஆம் ஆண்டில் மூலதனச் செலவினமாக சுமார் 175 பில்லியன் டாலர் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் முதலீடுகளால் செலவு அதிகரித்துள்ளதால் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாகதெரிகிறது.

முன்னதாக இந்த ஆண்டு ஜூலை மாதம் மைக்ரோசாப்ட் சுமார் 4,800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு வெளியே இந்தியாவில்தான் மைக்ரோசாப்ட் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டுள்ளது.

இது ஒரு கட்டாயப் பணிநீக்கம் இல்லை என்றாலும் இந்த முடிவு இங்குள்ள ஊழியர்களை பாதிக்கும் என கருதப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com