

ரிலையன்ஸ் ஜியோ, தனது நெட்வொர்க் கனெக்டிவிட்டியை மொபைல் டவர்கள் மற்றும் ஃபைபர் கேபிள்களை கடந்து செல்ல தயாராகி வருகிறது. இதற்காக, இந்தியா முழுவதும் சுமார் 1,600 செயற்கைக்கோள்கள் மற்றும் 23 தரை நிலையங்களைக் கொண்ட தொழில்நுட்ப அமைப்பை உருவாக்க அந்நிறுவனம் முன்மொழிந்துள்ளது.
நாட்டில் வணிகரீதியான செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்குவதற்கு தேவையான மீதமுள்ள ஒப்புதல்களுக்காக எலான் மஸ்க்-இன் ஸ்டார்லிங்க் நிறுவனம் இன்னும் காத்திருக்கும் வேளையில் இந்த திட்டம் வந்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2026 நிகழ்வில், ஜியோ தனது செயற்கைக்கோள் இணைப்பு திட்டங்களை காட்சிப்படுத்தியது.
வழக்கமான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்குவது கடினமாக உள்ள இந்தியாவின் பகுதிகளை சென்றடைவதற்காக, தற்போதுள்ள தரைவழி வலையமைப்புடன் செயற்கைக்கோள்களையும் பயன்படுத்தும் நோக்குடன், இந்த திட்டத்தை அந்நிறுவனம் "இறையாண்மை செயற்கைக்கோள் இணைப்பு" என்று முன்வைக்கிறது.
முன்மொழியப்பட்ட இந்த வலையமைப்பில் சுமார் 1,600 புவி சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்கள் இடம்பெறும். மேலும், செயற்கைக்கோள் அமைப்பை தரைவழி உள்கட்டமைப்புடன் இணைக்கும் வகையில் 23 தரை நிலையங்களை அமைக்கவும் ஜியோ திட்டமிட்டுள்ளது.
6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உட்பட, தரை மற்றும் கடல் பகுதிகள் முழுவதும் இணைப்பை வழங்குவதே இதன் பெரிய நோக்கம் என்று அந்நிறுவனம் கூறுகிறது. தொலைதூர கிராமங்கள், தீவுகள் மற்றும் எல்லை பகுதிகள் போன்ற இடங்களில் செயற்கைக்கோள் இணைப்பு பயனுள்ளதாக இருக்கும் என ஜியோ எதிர்பார்க்கிறது.
தனது செயற்கைக்கோள் வலையமைப்பை ஒரு தனி இணைப்பு அமைப்பாக கருதுவதற்கு பதிலாக, ஜியோ அதை தனது தற்போதைய மொபைல் மற்றும் ஃபைபர் உள்கட்டமைப்புடன் இணைக்க திட்டமிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த வலையமைப்பை நிறுவனங்கள் மற்றும் தொலைதூர இடங்களுக்கும், அத்துடன் விமான போக்குவரத்து, கடல்சார் செயல்பாடுகள், அரசு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம்.
வடிவமைப்பு, பொறியியல், ஒருங்கிணைப்பு, சோதனை, ஏவுதல், நிறுவுதல் மற்றும் செயல்பாடுகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய முழுமையான செயற்கைக்கோள் மதிப்பு சங்கிலியும் இந்தியாவிற்குள்ளேயே இருக்க வேண்டும் என அந்நிறுவனம் விரும்புவதாகக் கூறுகிறது.
ஜியோவை பொறுத்தவரை, ஃபைபர் கேபிள் பதிப்பது அல்லது கோபுரங்கள் அமைப்பது கடினமாகவோ அல்லது வணிக ரீதியாக சவாலாகவோ உள்ள இடங்களுக்குத் தனது வலையமைப்பை விரிவுபடுத்த செயற்கைக்கோள்கள் உதவக்கூடும்.
இந்தியாவில் ஒழுங்குமுறை செயல்முறைகள் நிறைவடைவதற்காக ஸ்டார்லிங்க் காத்திருக்கும் வேளையில், ஜியோவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மஸ்க், ஸ்டார்லிங்கின் இந்திய அறிமுகத்திற்காக பகிரங்கமாக வலியுறுத்தி வருகிறார்.
சமீபத்தில், X தளத்தில், பெயர் குறிப்பிடப்படாத சில "பெரும் செல்வந்தர்கள்" தங்கள் சந்தை நிலையைப் பாதுகாப்பதற்காக நிறுவனத்தைத் தடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், தற்போது இணைய இணைப்பு இல்லாத அல்லது இருக்கும் சேவைகளை வாங்க முடியாத மக்களுக்கு ஸ்டார்லிங்க் அதிவேக மற்றும் மலிவு விலையில் இணையத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.