ஐபோன் டுயோ ஸ்கிரீன் சரி செய்யும் விலையில் புதுசா ஐபோன் 18 ப்ரோ வாங்கலாமாம்

அதே சமயம் மற்ற சேதங்களுக்கு ரூ. 2,24,900 கட்டணம் வசூலிக்கப்படும்.
iPhone Duo
Published on: 

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்டபோன் மாடலாக ஐபோன் டியோவை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இதுவரை வெளியான ஐபோன் மாடல்களிலேயே இதுதான் மிகவும் விலை உயர்ந்தது ஆகும்.

இந்தியாவில், இந்த ஐபோனின் ஆரம்ப விலை ரூ. 2,99,900 ஆகும், இது கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் என்ற எல்லையை தொடுகிறது. இதன் முன்பதிவுகள் இன்னும் தொடங்காத நிலையில், ஐபோன் டுயோவை பழுதுபார்க்க ஏற்படும் செலவீனங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

பழுதுபார்க்க கட்டண விவரம்:

தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை பழுதுபார்ப்பதற்கான செலவு விவரங்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் வாரண்டி காலம் முடிந்த பிறகு செய்யப்படும் ஒரு பழுதுபார்ப்பிற்கே அதன் அசல் விலையில் கணிசமான பகுதி செலவாகக்கூடும் என்று குறிப்பிடுகிறது.

ஆப்பிள் சப்போர்ட் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பழுதுபார்ப்பு கட்டணங்களின்படி, ஐபோன் டுயோவில் உள் திரை சேதத்தை சரிசெய்வதே மிகவும் விலை உயர்ந்த பழுதுபார்ப்பாகும். இதற்காக அந்நிறுவனம் ரூ. 1,49,900 செலவாகும் என குறிப்பிட்டுள்ளது.

இது அந்த மடிக்கக்கூடிய ஐபோனின் ஆரம்ப விலையில் கிட்டத்தட்ட பாதியாகும். மேலும் ஒரு முழுமையான ஐபோன் 18 ப்ரோவின் விலைக்கு நெருக்கமாகவும் உள்ளது. ஒப்பீட்டளவில், இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ. 1,64,900 ஆகும்.

இதர பிரச்சினைகளுக்கான கட்டணம்:

மற்ற பழுதுபார்ப்பு செலவுகளும் விரைவாக அதிகரிக்கக்கூடும். அதன்படி மேல்புற அடுக்குச் சேதத்திற்கு ரூ. 5,900 முதல் இதர சேதங்களுக்கு ரூ. 2,24,900 வரை கட்டணங்கள் விதிக்கப்படும்.

கவர் லேயர் சேதத்தை சரிசெய்ய ஆப்பிள் நிறுவனம் ரூ. 5,900, பின்பக்க கண்ணாடி சேதத்திற்கு ரூ. 20,900 கட்டணமாக வசூலிக்கிறது. பேட்டரி சேவைக்கு ரூ. 24,900, பின்பக்க கேமரா சேதத்திற்கு ரூ. 26,900 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிப்புற டிஸ்ப்ளேவை சரிசெய்ய ரூ. 42,900 செலவாகும்.

இருப்பினும், வெளிப்புற டிஸ்ப்ளே மற்றும் பின்பக்க கண்ணாடி ஆகிய இரண்டும் சேதமடைந்தால், இந்தக் கட்டணம் ரூ. 55,900 வரை உயரக்கூடும். உள் டிஸ்ப்ளேவை மாற்றுவதற்கு ரூ. 1,49,900 செலவாகும், அதே சமயம் மற்ற சேதங்களுக்கு ரூ. 2,24,900 கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆப்பிள் கேர் கட்டண விவரம்:

எதிர்காலத்தில் ஏற்படும் சேதங்களைச் சரிசெய்வதற்கான செலவுகளைக் குறைப்பதற்காக, பெரும்பாலான பயனர்கள் ஆப்பிள் கேர் (AppleCare) சந்தாவை வாங்குவது அறிவுறுத்தப்பட்டாலும், ஐபோன் டுயோவிற்கான இந்த பராமரிப்புத் திட்டமே விலை உயர்ந்ததாகும்.

இதன் விலை ரூ. 51,900 ஆகும். இது, கீழே விழுதல் மற்றும் திரவம் சிந்துதல் போன்ற சம்பவங்கள் உட்பட, தகுதியான தற்செயலான சேதங்களுக்கு வரம்பற்ற பழுதுபார்ப்புகளையும், ஆப்பிள் நிபுணர்களிடம் இருந்து முன்னுரிமை ஆதரவையும் வழங்குகிறது. இருப்பினும், காப்பீட்டின் கீழ் வரும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒரு சேவை கட்டணம் பொருந்தும். திருட்டு மற்றும் இழப்பு ஆகியவை இந்த காப்பீட்டின் கீழ் சேர்க்கப்படவில்லை.

ஆப்பிள்கேர் திட்டத்தின் கீழ், பேட்டரி சேவைக்கான கட்டணம் ரூ. 0 ஆகும். கவர் லேயர் சேதத்திற்கு ரூ. 1,900 சேவை கட்டணமும், பின்பக்க கண்ணாடி சேதம் மற்றும் வெளிப்புற டிஸ்ப்ளே சேதம் ஒவ்வொன்றிற்கும் ரூ. 2,500 வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் உள் டிஸ்ப்ளே பழுதுபார்ப்புக்கு ரூ. 8,900 செலவாகும்; இது இல்லாத பட்சத்தில் இதன் கட்டணம் ரூ. 1,49,900 ஆகும்.

மற்ற தற்செயலான சேதங்களுக்கும் ரூ. 8,900 கட்டணம் வசூலிக்கப்படும். அதே சமயம் பட்டியலிடப்பட்ட திருட்டு அல்லது இழப்புக் கட்டணம் ரூ. 15,900 ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com