

கேமிங் உலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேம்: கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6. ராக்ஸ்டார் நிறுவனத்தின் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 வருகிற நவம்பர் 19-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது.
இந்த ஓபன் வேர்ல்ட் க்ரைம் கேம், வெளியான சில வாரங்களிலேயே பில்லியன் கணக்கில் வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரு தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின்படி, ஜிடிஏ 6 கேம் முன்பதிவுகள் மூலம் ஏற்கனவே சுமார் $630 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்சார் டவர் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6, அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே PS5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S/X-இல் 6.45 மில்லியன் யூனிட்களை விற்றுள்ளது. அந்த நிறுவனத்தின் தரவுகளின்படி , இந்த கேமின் முன்பதிவு விற்பனை மூலம் 630 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 5,950 கோடி) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், அந்த முன்பதிவு விற்பனையில் 74 சதவீதம் PS5 கன்சோலும், 26 சதவீத பங்கை எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S/X கன்சோலும் பெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிளே ஸ்டேஷனில், ஜிடிஏ 6 இதுவரை 4.8 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி, 468 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டியதாக கூறப்படுகிறது.
நிறுவனத்தின் தரவுகளின்படி, எக்ஸ்பாக்ஸ் கன்சோலில் இந்த கேம் இதுவரை 1.66 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி, 162 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கேம் டெவலப்பரான ராக்ஸ்டார் கேம்ஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான டேக்-டூ, ஜிடிஏ 6 கேமிற்கான முன்பதிவு எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டேக்-டூவின் 2027 நிதியாண்டின் முதல் காலாண்டு வருவாய் குறித்த கலந்துரையாடலின் போது, தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ட்ராஸ் செல்னிக், அந்த விளையாட்டின் முன்பதிவுகள் "அசாதாரணமான" தொடக்கத்தை கொண்டிருந்ததாக கூறினார்.
பின்னர், முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுடனான கலந்துரையாடலின் கேள்வி-பதில் பகுதியில், ஜிடிஏ 6-இன் முன்பதிவு எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்ததாக அந்த நிர்வாகி கூறினார்.