நெட்ப்ளிக்ஸ்-இல் மாஸ் காட்டிய ஜி.டி.ஏ. 6 எக்ஸ்டெண்டட் லுக் - டாப் 10-இல் முதலிடம் பிடித்து அசத்தல்

இந்த விளையாட்டின் 27 நிமிட நீட்டிக்கப்பட்ட முன்னோட்டம் 14,000,000 மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளது.
GTA 6 Extended Look Poster
Published on

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6: எக்ஸ்டெண்டட் லுக், இந்த வாரம் 31.1 மில்லியன் பார்வைகளுடன் நெட்ப்ளிக்ஸ் ஆங்கிலத் திரைப்படங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று இந்த ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியான ஜிடிஏ 6 கேம்பிளே காட்சிப்படுத்தல், உலகளவில் கண்காணிக்கப்பட்ட 93 நாடுகளில் 87 நாடுகளில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக இருந்தது.

நெட்ப்ளிக்ஸ் டாப் 10 பட்டியல்:

ஜி.டி.ஏ. 6-இன் எக்ஸ்டெண்டட் லுக் டிரெய்லர், ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 30 வரையிலான வாரத்தில், வெறும் நான்கு நாட்களில் 31.1 மில்லியன் பார்வைகளை எட்டி, நெட்ப்ளிக்ஸ்-இன் உலகளாவிய ஆங்கில திரைப்படப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. நெட்ப்ளிக்ஸ்-இன் கூற்றுப்படி, இந்த விளையாட்டின் 27 நிமிட நீட்டிக்கப்பட்ட முன்னோட்டம் 14,000,000 மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளது.

ஜி.டி.ஏ. 6 எக்ஸ்டெ்டட் லுக் வெறும் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே நெட்ப்ளிக்ஸ்-இல் பிரத்தியேகமாக கிடைத்தது என்பதை கருத்தில் கொள்ளும்போது, ​​இந்த சாதனை இன்னும் வியக்கத்தக்கதாக அமைகிறது. அதன் விளையாட்டுக்காட்சி அதே நாளில் யூடியூபில் வெளியானது. இருப்பினும், அது முதலில் நெட்ப்ளிக்ஸ் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

டாப் 3 திரைப்படங்கள்:

நெட்ப்ளிக்ஸ்-இன் ஆங்கிலத் திரைப்படங்கள் பட்டியலில், குற்றத் திரில்லர் திரைப்படமான 'தி விஸ்பர் மேன்' மற்றும் திகில் திரைப்படமான 'தி லாஸ்ட் ஹவுஸ்' முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

வரவிருக்கும் GTA 6 விளையாட்டின் விளையாட்டு முறையை வெளிப்படுத்திய தொடர்ச்சியான கசிவுகளை தொடர்ந்து, 'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 : எக்ஸ்டெண்டட் லுக்' ஆகஸ்ட் 27 அன்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தில், ஜிடிஏ 6 விளையாட்டின் 27 நிமிட முழுமையான விளையாட்டு காட்சிகள் எந்தவித வர்ணனையுமின்றி இடம்பெற்றிருந்தன. அந்த டிரெய்லரில், கதாநாயகர்களான ஜேசன் மற்றும் லூசியா குற்றச் செயல்கள், பணிகள், கொள்ளைகள் மற்றும் பலவற்றில் ஈடுபடுவது காட்டப்பட்டது.

ஜி.டி.ஏ. 6 எக்ஸ்டெ்டட் லுக் இப்போது ராக்ஸ்டார் கேம்ஸ்-இன் யூடியூப் சேனல் மற்றும், ஜி.டி.ஏ. 6 இணையதளத்தில் பார்க்கலாம். கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6, நவம்பர் 19-ஆம் தேதியன்று PS5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S/X-ல் வெளியிடப்படும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com