செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித இனத்தையே ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஆற்றல் கொண்டது என்ற கடுமையான எச்சரிக்கையுடன், கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்தின் முன்னணி AGI பாதுகாப்பு மற்றும் அலைன்மென்ட் ஆராய்ச்சியாளர்களான பிலால் சுஹ்தாய் மற்றும் ஜோஷ் எங்கெல்ஸ் ஆகியோர் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். AI-இன் தற்போதைய வளர்ச்சி மனிதக் கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டிருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தனது ராஜினாமா குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிலால் சுஹ்தாய், "கூகுள் நிறுவனத்தில் AI-இன் வளர்ச்சியை நான் மிக அருகில் இருந்து பார்த்துள்ளேன். இந்த தொழில்நுட்பத்தின் தற்போதைய போக்கு எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. AI மனித இனம் முழுவதையும் அழிக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்றும், இந்த பேரழிவைத் தடுக்க நமக்கு இருக்கும் நேரம் மிக வேகமாக குறைந்து வருகிறது என்றும் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சாதாரண நிலையில் இருந்த AI தொழில்நுட்பம், வெறும் நான்கு ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் வளர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார். குறிப்பாக, மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் அளவுக்கு அதன் திறன் இப்போது அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூகுள் டீப்மைண்டின் AGI பாதுகாப்பு குழுவில் பணியாற்றிய மற்றொரு முக்கிய ஆராய்ச்சியாளரான ஜோஷ் எங்கெல்ஸும் தனது பதவியை துறந்துள்ளார். "அடுத்த ஐந்து ஆண்டுகளில் AI அமைப்புகளால் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக நான் கருதுகிறேன். இதன் துல்லியமான சதவிகிதம் எனக்குத் தெரியவில்லை என்றாலும், உலகிலேயே இப்போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான அச்சுறுத்தல் இதுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
டீப்மைண்டில் இருந்து விலகிய ஜோஷ் எங்கெல்ஸ், தற்போது AI நிறுவனங்களைக் கண்காணிக்கும் Model Evaluation and Threat Research என்ற லாப நோக்கமற்ற சுயாதீன ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
ஆராய்ச்சியாளர்களின் இந்த அச்சத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அண்மையில் சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சோதனை கட்டத்தில் இருந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட ரகசிய AI ஏஜென்ட்டுகள், மனிதர்களின் அனுமதியின்றி தானாகவே இணையத்தைப் பயன்படுத்தி 'ஹக்கிங் ஃபேஸ்' என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்ய முயன்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓபன் ஏஐ-இன் மேம்பட்ட AI ஏஜென்ட்டுகள், 90 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற 'நேவியர்-ஸ்டோக்ஸ் மில்லினியம் சேலஞ்ச்' கணிதப் புதிருக்குத் தீர்வுகண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
AI அமைப்புகள் மனிதர்களின் நலனுக்கு விரோதமாக மாறாமல், மனித விருப்பப்படியே செயல்பட வைக்கும் தொழில்நுட்பத்திற்கு 'அலைன்மென்ட்' என்று பெயர்.
தற்போதைய நிலையில், இந்த பாதுகாப்பு தொழில்நுட்பம் மிகவும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாகவும், ஆனால் AI-இன் செயல்திறன் அதைவிடப் பல மடங்கு வேகமாக வளர்ந்து வருவதாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சூப்பர் இன்டெலிஜென்ட் எனப்படும் மனிதர்களை விடப் பல மடங்கு புத்திசாலித்தனமான AI அமைப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் உருவாக்கப்படலாம் என்பதால், மனித குலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே பணியிலிருந்து விலகிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த குரலாக உள்ளது.B