

ஓபன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் எக்ஸ் பக்கத்தில் தனது பெயரை சாம் ஆல்ட்மேன் என்பதிலிருந்து ரேம் ஆல்ட்மேன் என மாற்றியுள்ளார்.
ஓபன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் "சீக்கி பின்ட்" என்ற பாட்காஸ்டில் கலந்துகொண்டார்.
அந்த பாட்காஸ்டின் போது, அவர் கணினி ரேம் (RAM) குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
அதில், "உலகளவில் RAM-ன் கிடைக்கும் அளவு குறைவாகவே உள்ளது. எனவே, மிகக் குறுகிய நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மக்களின் தனிப்பட்ட கணினிகளில் அதிக அளவு RAM வைத்திருப்பது, வளங்களை நல்ல முறையில் பயன்படுத்துவது அல்ல.
கிளவுட் தரவு மையங்களில் கணினி RAM-ஐ மிகவும் திறமையாக பயன்படுத்த முடியும்" என்று ஆல்ட்மேன் தெரிவித்தார்.
மக்களின் கணினிகளில் உள்ள RAM, மொத்த நேரத்தில் சுமார் 5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படும்போது, அது புத்திசாலித்தனம் அல்ல என்றும் அவர் வாதிடுகிறார்.
ஆல்ட்மேனின் கருத்தை தொடர்ந்து, சமூக ஊடகத்தில் அவர் மீது விமர்சனம் எழுந்தன. தனது சொந்தப் பணத்தில் கணினி வாங்கிய எவருக்கும், தங்களுக்குத் தேவையான அளவு RAM நிறுவுவதற்கு முழு உரிமை உண்டு என பலரும் கருத்து பதிவிட்டனர்.
தங்கள் தரவுகளை ஏன் மூன்றாம் தரப்பு கிளவுட் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுக்காக கணினி சில்லுகளையும் RAM-ஐயும் பெருமளவில் கொள்முதல் செய்வதாக பலரும் சுட்டிக்காட்டினர்.
இது சந்தையில் RAM பற்றாக்குறையை உருவாக்குவதோடு, சாதாரண மக்கள் கணினி வாங்குவதை மேலும் விலை உயர்ந்ததாக மாற்றுகிறது.
இந்த நேரத்தில் தனிநபர் கணினிகளில் அதிக RAM தேவையற்றது என்று சாம் ஆல்ட்மேன் பேசியது அவரின் வல்லாதிக்க போக்கை காட்டுவதாக பலர் தெரிவித்தனர்.
இதில் சிலர் சாம் ஆல்ட்மேன் பெயரை ரேம் ஆல்ட்மேன் என மாற்றிக்கொள்ளுமாறு கிண்டலாக குறிப்பிட்டனர். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். தன் எக்ஸ் பக்க பெயரை ரேம் ஆல்ட்மேன் என மாற்றிக்கொண்டார்.
மேலும் RAM குறித்த தன் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் தங்கள் கணினிகளில் தங்களுக்கு தேவையான அளவு ரேமை நிறுவிக்கொள்ளும் வகையில், உலகளாவிய RAM உற்பத்தியை அதிகரிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்
மேலும், நீண்ட காலமாக உலகளாவிய RAM உற்பத்தியை அதிகரிக்க தான் வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.