

இந்தியாவின் 80-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL), பல்வேறு சலுகைகள், நெட்வொர்க் மேம்பாடுகள் மற்றும் முக்கிய கூட்டணிகளை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புகள் மொபைல் நெட்வொர்க் விரிவாக்கம், சிறப்பு சலுகை கட்டணங்கள், வீட்டுப் பயன்பாட்டு பிராட்பேண்ட் திட்டங்கள், டிஜிட்டல் செயலிகள் மற்றும் உள்நாட்டு வன்பொருள் உற்பத்தி கூட்டணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
நகரங்கள், கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் தனது மொபைல் சேவை விரிவுபடுத்த, பி.எஸ்.என்.எல் கூடுதலாக 26,300-க்கும் மேற்பட்ட 4G 'பேஸ் டிரான்ஸ்ஸீவர் ஸ்டேஷன்' (BTS) தளங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
தரவு வேகம், அழைப்புத் தரம் மற்றும் ஒட்டுமொத்த சேவையின் சீரான தன்மையை மேம்படுத்தும் நோக்கில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் 5G-க்கு மேம்படுத்தக்கூடிய தொழில்நுட்ப கட்டமைப்பு இதில் பயன்படுத்தப்படுகிறது.
1. 'Re. 1 Freedom 2.0' திட்டம்: புதிய மொபைல் சந்தாதாரர்களை ஈர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சோதனை சலுகை தினமும் 1ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் அழைப்புகள் (Voice calls), ரூ. 1-க்கு 24 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
ரூ. 2,399 மதிப்பிலான வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் சந்தாதாரர்களுக்கு கூடுதலாக 47 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த சேவை காலம் 365 நாட்களிலிருந்து 412 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.
2. 'Fibre Freedom' திட்டம் (மாதம் ரூ.1,111): இது ஒரு உயர்தர FTTH பிராட்பேண்ட் திட்டமாகும். இதில் 200 Mbps வரையிலான வேகம், மாதத்திற்கு 5,000ஜிபி டேட்டா மற்றும் 25-க்கும் மேற்பட்ட OTT தளங்களுக்கான அணுகல் ஆகியவை வழங்கப்படுகின்றன.
பி.எஸ்.என்.எல். இலவச டிவி: 'Tango TV' தொழில்நுட்பத்துடன் இயங்கும் மற்றும் 'Selfcare' செயலி மூலம் அணுகக்கூடிய இந்த அம்சம், சுமார் 500 இலவச நேரலை டிவி சேனல்கள் மற்றும் தேவைக்கேற்ப பார்க்கும் ஆன்-டிமான்ட் கன்டென்ட் (on-demand content) நேரடியாக மொபைல் பயனர்களுக்கு வழங்குகிறது.