

என்விடியா நிறுவனத்துக்கு எதிராக இந்திய இளைஞர் வைத்த குற்றச்சாட்டு பேசுபொருளாகி வருகிறது
செயற்கை நுண்ணறிவு நம் வாழ்வையும் தொழில்களையும் எளிதாக்குகிறது என்ற பொதுக்கருத்து நிலவி வருகிறது. மறுபுறம் அது மனிதனை ஆட்டிப்படைக்க கூடிய ஆபத்து இருப்பதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டுக்கும் அப்பால், செயற்கை நுன்னறிவு வளர்ச்சியினால் சாமானியர்களுக்கு ஏற்படும் நெருக்கடி மீது வெளிச்சம் பாய்ச்சும் வகையில் அண்மையில் ஒரு சமபவம் அரங்கேறியுள்ளது.
நியூயார்க் 'கிளைமேட் வீக்' நிகழ்வின்போதுபோது, என்விடியாவின் நிலைத்தன்மைப் பிரிவுத் தலைவர் ஜோஷ் பார்க்கரை ஒரு இந்திய மாணவர் எதிர்த்து கோஷமிட்டபோது இந்த விஷயம் கவனத்திற்கு வந்தது.
அந்த மாணவர், “உங்களால் இந்தியாவில் என் குடும்பத்தினர் வறட்சியால் இறந்து கொண்டிருக்கிறார்கள்,” என்று கோஷமிட்டார். அந்தக் காணொளி வைரலானது.
என்விடியா நிறுவனம் 1.5 கோடி டன் கரியமில வாயுவை வெளியேற்றியுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் பொறுப்புணர்வு குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார் .
அவரது குடும்பத்தைப் பாதித்த வறட்சிக்கு என்விடியா நிறுவனமே காரணம் என்ற கூற்று நிரூபிக்கப்படவில்லை. ஆனால் ஆனால் அவரது வார்த்தைகள் ஒரு பெரிய கேள்வியை எழுப்பின.
செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி அதிகரிக்கும்போது, அதன் பிரம்மாண்டமான தரவு மையங்கள் கட்டப்படும் இடங்களிலிருந்து அது எதைக் கோருகிறது?
செயற்கை நுண்ணறிவு மையத்தைக் கட்டமைக்க முயன்றுகொண்டிருக்கும் வேளையில், அதன் பல நகரங்களும் கிராமங்களும் ஏற்கனவே தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வருகின்றன.
ஒரு கேள்வியைக் கேட்டவுடன் நொடிபொழுதில் செய்ற்கை நுண்ணறிவு பதில் தந்துவிடுகிறது. ஒரு படத்தை உருவாக்கி தந்துவிடுகிறது.
ஆனால் இந்த நொடிபொழிதில் நீங்கள் கேட்ட கேள்வி வெகு தொலைவில் எங்கோ உள்ள டேட்டா சென்டர் - தரவு மையத்தில் பிராசஸ் செய்யப்பட்டு அங்கிருந்து உங்களின் பதில் உருவாக்கப்படுகிறது.
இந்த டேட்டா சென்டரில் உள்ள சிப்புகள் மிக அதிக அளவு வெப்பத்தை உருவாக்குகின்றன. எனவே, சர்வர்கள் பாதுகாப்பாக இயங்குவதை உறுதிசெய்ய, தரவு மையங்களை தொடர்ச்சியாக குளிர்விக்க வேண்டிய அவசியம் எழுகிறது.
இந்த குளிர்விப்பு செயல்முறைக்கு பிரதானமாக நீர் பயன்படுத்தப்படுகிறது. அங்கு உருவாகும் வெப்பத்தை நீரானது உறிஞ்சி ஆவியாகிறது.
தரவு மையம் எந்த அளவிற்குப் பெரியதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் உள்ளதோ, அந்த அளவிற்கு அதன் குளிர்விப்பு தேவையும் அதிகமாக இருக்கும்.
இந்த வசதிகளை இயக்குவதற்குத் தேவைப்படும் மின்சாரத்திற்கும் நீர் பயன்பாடு உண்டு, ஏனெனில் பல மின் உற்பத்தி நிலையங்கள் குளிர்விப்பதற்காக நீரைப் பயன்படுத்துகின்றன.
ஆகவே, செயற்கை நுண்ணறிவுக்குப் பின்னால் உள்ள நீர் எப்போதும் கண்ணுக்குத் தெரிவதில்லை. அது தரவு மையத்தின் வழியாகவோ, அல்லது அதற்கு ஆற்றல் வழங்கும் மின் அமைப்பின் வழியாகவோ பாய்ந்து கொண்டிருக்கலாம்.
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது, அதற்குப் பின்னணியில் உள்ள இயந்திரங்களும் வளர்ந்து வருகின்றன.
அரசுத் தரவுகளின்படி, இந்தியாவின் தரவு மையத் திறன் 2020ல் சுமார் 375 மெகாவாட்டிலிருந்து 2026ல் சுமார் 1,575 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
மும்பை, நவி மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டெல்லி ஆகியவை முக்கிய தரவு மையங்களாக உருவெடுத்துள்ளன.
இந்தியா தனது செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சிப்பதால், தற்போது இத்துறையில் அதிக முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் தரவு மையத் திறன் சுமார் 6.5 ஜிகாவாட்டை எட்டக்கூடும் என CEEW மதிப்பிட்டுள்ளது.
அதன் பொருள், அதிக சர்வர்கள், அதிக கணினிச் செயலாக்கம் மற்றும் அந்த சர்வர்களை இயக்கி வைக்கத் தேவையான வளங்களுக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதாகும்.
இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் அதிக முதல் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக நிதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது.
இந்தியா உலகின் நன்னீர் வளத்தில் சுமார் 4%-ஐக் கொண்டுள்ளது, ஆனால் இதே இந்தியா உலக மக்கள்தொகையில் சுமார் 17%ஐக் கொண்டுள்ளது.
நிலத்தடி நீர் குறைதல், விவசாயம், மக்கள்தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல், அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் மாறிவரும் மழைப்பொழிவு முறைகள் ஆகிய அனைத்தும் பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன்.
வேகமாக விரிவடைந்து வரும் ஒரு தொழில்துறை, ஏற்கனவே சிரமத்தில் இருக்கும் இடங்களுக்கு மேலும் ஒரு அழுத்தத்தைச் சேர்க்குமா என்பதே மிகவும் பொருத்தமான கேள்வியாகும்.
கிளைமேட் வீக் நிகழ்வில் பங்கேற்ற மாணவர், என்விடியா நிறுவனம் 1.5 கோடி டன் கரியமில வாயுவை வெளியிட்டதாகக் கூறினார்.
என்விடியாவின் 2026 நிதியாண்டுக்கான நிலைத்தன்மை அறிக்கையின்படி, அந்நிறுவனத்தின் ஸ்கோப் 3 உமிழ்வுகள் சுமார் 1.07 கோடி டன் CO2-க்கு சமமானதாக இருந்தன.
ஸ்கோப் 3 என்பது ஒரு நிறுவனத்தின் பரந்த விநியோகச் சங்கிலி மற்றும் மதிப்புச் சங்கிலி முழுவதும் உருவாகும் மறைமுக உமிழ்வுகளை உள்ளடக்கியது.
இந்தியாவில், தண்ணீர் பற்றாக்குறையின் தீவிரத்தை ஏற்கனவே உணர்ந்த நகரங்களில் இயந்திரங்கள் அதிகளவில் நிறுவப்பட்டு வருகின்றன.
இந்தியா ஒரு முக்கிய செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையமாக உருவெடுக்க விரும்புகிறது.
அதே சமயம், நிலத்தடி நீர் குறைவு, வறட்சி, சீரற்ற மழைப்பொழிவு மற்றும் அதிகரித்து வரும் நகர்ப்புறத் தேவை ஆகியவற்றையும் அது சமாளிக்க வேண்டியுள்ளது.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், தர்லுவாடாவில் உள்ள கூகுள்-அதானி தரவு மையம் கட்டப்பட்டு வருவதும் அங்குள்ள உள்ளூர் நீர் தேவைக்கு அச்சறுத்தலாக அமைந்துள்ளது.
தரவு மையங்கள் எங்கு கட்டப்படுகின்றன, குளிர்விக்க அவை எதைப் பயன்படுத்துகின்றன, மேலும் பயன்படுத்தப்படும் நீர் நன்னீரா அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய நீரா என்பதும் இதில் அடங்கும்.