

கடந்த மாதம் தனது ஐபோன் 18 சீரிஸ் அறிமுகத்தை தொடர்ந்து , ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 13-ஆம் தேதியன்று மற்றொரு நிகழ்வை நடத்துகிறது. இம்முறை, அந்நிறுவனம் நியூ யார்க் நகரில் 'வெல்கம் ஹோம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. எனினும், இது குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, ஆனால் டிஸ்ப்ளேவுடன் கூடிய ஸ்மார்ட் ஹோம் ஹப்-ஆன தனது புதிய ஹோம்பேட், ஹோம்பாட் மினி 2 மற்றும் ஒரு புதிய ஆப்பிள் டிவி செட்-டாப் பாக்ஸ் ஆகியவற்றை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என்று ப்ளூம்பெர்க் நிர்வாக ஆசிரியர் மார்க் குர்மன் கூறுகிறார்.
மேலும், எல்ஜி மற்றும் ஷ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனங்களுடன் இணைந்து ஆப்பிள் பல புதிய அக்சஸரீக்களை அறிமுகம் செய்யக்கூடும் என்று குர்மன் கூறுகிறார். இந்த சாதனங்களில் கதவுப் பூட்டு, டெட் போல்ட் பூட்டு, பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் தெர்மோஸ்டாட்கள் ஆகியவை அடங்கும் என தெரிகிறது.
இந்த சாதனங்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை புதிய சிரி ஏ.ஐ. (Siri AI) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹோம்பேட் (HomePad) ஆனது பயனர்களை அவர்களின் தோற்றம் மற்றும் குரலின் அடிப்படையில் அடையாளம் கண்டு, இசை, குறிப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்தச் சாதனம் ஒரு ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோல் சென்டர் போன்று செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஹோம்பேட் மாடலில் 7-இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் இது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கும், ஹோம் ஓ.எஸ். மற்றும் ஆப்பிள் செயலிகளை இயக்கும் என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக, ஹோம்பாட் மினி 2 (HomePod mini 2) மற்றும் ஆப்பிள் டிவி 4K (Apple TV 4K) ஆகிய இரண்டும் வேகமான பிராசஸர்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனங்கள் ஐபோன் ஏர் மாடலில் உள்ள A17 Pro சிப்செட் கொண்டு இயங்கக்கூடும். மேலும், ஆப்பிள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய N1 வயர்லெஸ் சிப் மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கும்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் 3 லட்சம் ரூபாய் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த ஐபோன் டுயோ அக்டோபர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. மேலும், அக்டோபர் 27-ஆம் தேதி அல்லது அதைச் சுற்றியுள்ள நாட்களில் ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய தொடுதிரை மேக்புக் மற்றும் ஒரு மேம்படுத்தப்பட்ட ஐபேட் மினியை வெளியிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சாதனங்களில் ஏதேனும் ஒன்றை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். ஹோம்பாட் மாடலை தவிர, டோர் வெல், பாதுகாப்பு கேமராக்கள், தெர்மோஸ்டாட்கள், டெட் போல்ட் லாக், தொடுதிரை மேக்புக் மற்றும் OLED ஐபேட் மினி ஆகியவை ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு வகைகளாக அமையும்.