

சர்வதேச அளவில் மெமரி சிப்களின் விலை உயர்வு காரணமாக, ஆப்பிள் நிறுவனம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் தனது மேக்புக் மற்றும் ஐபேட் மாடல்களின் ஆரம்ப விலைகளை, அவற்றின் அறிமுக விலைகளில் இருந்து 20 சதவீதம் முதல் அதிகபட்சம் 42 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
ஆப்பிள் இந்தியாவின் இணையதளத்தில் உள்ள புதிய விலை பட்டியலின்படி, எம்5 சீரிஸ் சிப்செட் கொண்டு உருவாக்கப்பட்ட மேக்புக் ப்ரோ விலையை அந்நிறுவனம் சுமார் 20 சதவீதம் உயர்த்தியுள்ளது.
விலை உயர்வு:
M5 ப்ரோ சிப் கொண்ட 14-இன்ச் மேக்புக் ப்ரோ விலை, அறிமுக விலையான ரூ.2,49,900-லிருந்து ரூ.2,99,900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐபேட் ஏர் விலையிலும் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. 13-இன்ச் ஐபேட் ஏர் பேஸ் மாடலின் விலை, ரூ.84,900-இல் இருந்து 41.22 சதவீதம் அதிகரித்து ரூ.1,19,900-ஆக உயர்ந்துள்ளது.
கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் ஆராய்ச்சி பிரிவு துணை தலைவர் நீல் ஷா கூறும் போது, மெமரி முதல் பிராசஸர்கள் வரையிலான செமி கண்டக்டர் சிப்களின் விலை உயர்வால் நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கான கணினி மற்றும் டேப்லெட் சந்தையின் செலவு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தைத் தொடர்ந்து, மேக்புக் நியோ, மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ வைஃபை ஆகியவற்றின் விலையை ஆப்பிள் உயர்த்தியுள்ளது.
ஆப்பிள் அறிக்கை:
நுகர்வோர் மின்னணுத் துறை முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிர்கொண்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களின் விரைவான விரிவாக்கம், மெமரி மற்றும் ஸ்டோரேஜிற்கான தேவையில் ஒரு அசாதாரணமான உயர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உதிரிபாகத்தின் விலை இவ்வளவு அதிகமாகவும், இவ்வளவு விரைவாகவும் உயர்வதை நாங்கள் இதற்கு முன் கண்டதில்லை.
இதுவரை இந்த விலை உயர்வுகளில் இருந்து எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் பாதுகாத்து வந்தோம், ஆனால் இப்போது ஐபேட் மற்றும் மேக் மாடலுக்கான இன்றைய விலை உயர்வுகள் உட்பட, பல தயாரிப்புகளின் விலைகளை உயர்த்த தொடங்க வேண்டிய ஒரு நிலையை நாங்கள் அடைந்துள்ளோம்.
இது ஒரு விரும்பத்தக்க செய்தி அல்ல என்பதை நாங்கள் அறிவோம், மேலும் தீர்வுகளை கண்டறிய நாங்கள் அயராது உழைத்து வருகிறோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.