மேக் ஸ்டூடியோ, மேக் மினி மாடல்களை அப்டேட் செய்த ஆப்பிள் - விலை, முழு விவரங்கள்!

இது முன்பைவிட 4.3 மடங்கு அதிவேக ஏ.ஐ. செயல்திறன் வழங்கும்.
mac mini and mac studio
Published on

ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மேக் ஸ்டூடியோ (Mac Studio) மற்றும் மேக் மினி (Mac Mini) மாடல்களை அப்டேட் செய்துள்ளது. இந்த முறை ஆப்பிள் தனது டெஸ்க்டாப் மாடல்களில் புதிய தலைமுறை சிலிகான் வழங்கியுள்ளது.

அதன்படி மேம்பட்ட மேக் ஸ்டூடியோ மாடல் தற்போது M5 மேக்ஸ் மற்றும் முற்றிலும் புதிய M5 அல்ட்ரா சிப்செட் உடன் வருகின்றன. இதேபோல் மேக் மினி மாடல் M5 ப்ரோ மற்றும் M6 சிலிகான் பிராசஸர் உடன் வருகிறது. புதிய மாடல்கள் வைபை 7 மற்றும் ப்ளூடூத் 6 சப்போர்ட் உடன் வருகின்றன.

மேக் ஸ்டூடியோ சிறப்பு அம்சங்கள்:

ஆப்பிள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மேக் ஸ்டூடியோ தற்போது M5 சிலிகான் பிராசஸருடன் வருகிறது. இது முன்பைவிட 4.3 மடங்கு அதிவேக ஏ.ஐ. செயல்திறன் வழங்கும் என்றும் இருமடங்கு வேகத்தில் ஸ்டோரேஜ், 1.8 மடங்கு கிராஃபிக்ஸ் மற்றும் 1.3 மடங்கு அதிவேக சி.பி.யு. செயல்திறன் வழங்குகிறது.

M5 மேக்ஸ் சிப்செட் கொண்ட மேக் ஸ்டூடியோ மாடலை 18-கோர் சி.பி.யு. மற்றும் அதிகபட்சம் 40-கோர் ஜி.பி.யு. உடன் கான்ஃபிகர் செய்து கொள்ள முடியும். இத்துடன் ஒவ்வொரு ஜி.பி.யு. கோரிலும் நியூரல் அக்செல்லரேட்டர்கள் உள்ளன.

இந்த மாடல் அதிகபட்சம் 128 ஜிபி யுனிஃபைடு மெமரி, நொடிக்கு 614ஜிபி வரையிலான மெமரி பேண்ட்வித் ஆப்ஷனில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் M5 அல்ட்ரா மாடலில் 36-கோர் சி.பி.யு., 80-கோர் ஜி.பி.யு. மற்றும் 512 ஜிபி யுனிஃபைடு மெமரி, நொடிக்கு 1.2 டி.பி. மெமரி பேண்ட்வித் கொண்டுள்ளது.

மேக் மினி சிறப்பு அம்சங்கள்:

புதிய மேக் மினி மாடல் M6 சிப் உடன் வருகிறது. இதில் 12-கோர் சி.பி.யு. மற்றும் 12-கோர் ஜி.பி.யு. உள்ளது. இது முன்பை விட நான்கு மடங்கு அதிவேகமான ஏ.ஐ. செயல்திறன் மற்றும் இருமடங்கு வேகமான கிராஃபிக்ஸ் அனுபவம் வழங்குகிறது. M6 சிப்செட்டில் இரட்டை 16-கோர் நியூரல் என்ஜின் மற்றும் 32 ஜிபி வரை யுனிஃபைடு மெமரி உள்ளது.

மேம்பட்ட மேக் ஸ்டூடியோ மற்றும் மேக் மினி மாடல்கள் வைபை 7, ப்ளூடூத் 6, 2.5ஜிபி ஈத்தர்நெட், ஆப்ஷனல் 10 ஜிபி ஈத்தர்நெட் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. இவற்றில் யு.எஸ்.பி. சி போர்ட்கள், ஹெட்போன் ஜாக் , ஹெச்.டி.எம்.ஐ., ஈத்தர்நெட் மற்றும் தண்டர்போல்ட் போர்ட்கள் உள்ளன.

இந்திய விலை விவரங்கள்:

புதிய மேக் ஸ்டூடியோ M5 மேக்ஸ் மாடலின் விலை ரூ. 2,79,900 என தொடங்குகிறது. அதிக சக்திவாய்ந்த M5 அல்ட்ரா சிப் கொண்ட மாடலின் விலை ரூ. 6,29,900 ஆகும். கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கு இந்த மாடல்களின் விலை முறையே ரூ. 2,56,900 மற்றும் ரூ. 5,84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

M6 சிப்செட் கொண்ட புதிய மேக் மினி விலை ரூ. 99,900 என்றும், M5 ப்ரோ சிப்செட் கொண்ட மாடலின் விலை ரூ. 2,09,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கு இந்த மாடல்களின் விலை முறையே ரூ. 88,900 மற்றும் ரூ. 1,97,900 ஆகும்.

இந்த மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்குகிறது. வாடிக்கையாளர்கள் இந்த மாடல்களை ஆப்பிள் ஸ்டோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் வாங்கிட முடியும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com