6,000mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் HMD ஸ்மார்ட்போன் அறிமுகம்

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் சிறப்பு விலை குறைப்புடன் விற்பனைக்கு வருகிறது.
HMD Vibe 2 Pro 5G
Published on: 

HMD நிறுவனத்தின் வைப் சீரிஸின் சமீபத்திய மாடலாக வைப் 2 ப்ரோ 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட HMD வைப் 2 5G மாடலுடன் இந்த ஸ்மார்ட்போன் இணைகிறது.

மேலும், இது டிஸ்ப்ளே, கேமராக்கள் மற்றும் பேட்டரி ஆகியவற்றில் பல அப்டேட்களை கொண்டுவருகிறது. இது ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். மற்றும் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த போனில் 120Hz டிஸ்ப்ளே, 5G கனெக்டிவிட்டி மற்றும் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய பெரிய பேட்டரி ஆகிய அம்சங்கள் உள்ளன.

HMD வைப் 2 ப்ரோ 5G சிறப்பு அம்சங்கள்:

புதிய HMD வைப் 2 ப்ரோ 5G மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.78-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் 8 ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். உடன் வருகிறது. மேலும் இரண்டு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, HMD வைப் 2 ப்ரோ 5G மாடலில் 64MP சோனி IMX682 சென்சார், 2MP மேக்ரோ கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு கேமராக்களின் கீழே வட்ட வடிவ எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளது. மேலும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இந்த ஃபோனில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இண்டஸ் ஏஐ (Indus AI) அம்சத்துடன் வருகிறது, இது 22-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் ஸ்மார்ட் உதவியை வழங்குகிறது. மேலும், இந்த மாடல் பிராந்திய மொழிகளில் உதவி வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. HMD வைப் 2 ப்ரோ 5G மாடலில் 33W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி கொண்டுள்ளது.

HMD வைப் 2 ப்ரோ 5G விலை விவரங்கள்:

HMD வைப் 2 ப்ரோ 5G ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியன்ட் ரூ. 15,999-க்கும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 17,999-க்கும் இந்தியாவில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு வேரியன்ட்களையும் குறிப்பிட்ட காலத்திற்கு முறையே ரூ. 14,999 மற்றும் ரூ. 16,999-க்கு வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் சில்வர் மிஸ்ட், அக்வா கிரீன் மற்றும் காஸ்மிக் பர்பிள் ஆகிய வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com