

உலகப் புகழ்பெற்ற மல்யுத்த நிறுவனமான WWE-ன் முன்னணி நட்சத்திர வீரர் பிரான்சன் ரீட் (Bronson Reed) (இயற்பெயர்: ஜெர்மைன் ஹேலி - Jermaine Haley), உடல்நலக் குறைபாடுகள் காரணமாக நேற்று தனது 38-வது வயதில் காலமானார்.
பிரான்சன் ரீட்டின் மறைவு குறித்து WWE வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரான்சன் ரீட் என அறியப்படும் ஜெர்மைன் ஹேலி உடல்நலக் குறைபாடுகள் காரணமாக காலமானார் என்ற செய்தியை மிகுந்த வேதனையுடன் அறிவிக்கிறோம்.
அவர் மல்யுத்த அரங்கில் ஒரு பிரம்மாண்டமான ஆளுமையாக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சிறந்த மனிதராகவும், குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவராகவும், சக வீரர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவராகவும் திகழ்ந்தார்.
அவரது கர்ப்பிணி மனைவி பெய்ஜ், மகள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 7-ம் தேதி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற 'கிரவுன் ஜுவல்' போட்டியில் தான் பிரான்சன் ரீட் கடைசியாகத் தோன்றியிருந்தார். அந்தப் போட்டியில் ஓபா ஃபெமி என்பவர் பிரான்சன் ரீட்டை மேடையிலிருந்து தூக்கி மேஜையின் மீது வீசியதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் அவரது விலா எலும்புகள் முறிந்ததாகவும், சிறுநீரகத்தில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. சவுதி அரேபியாவில் சிகிச்சை பெற்றுவிட்டு அமெரிக்கா திரும்பிய நிலையில், தற்போது உடல்நலக் குறைபாடுகளால் அவர் உயிரிழந்துள்ளார்.
எனினும், அந்தப் போட்டியில் ஏற்பட்ட காயத்திற்கும் அவரது உயிரிழப்பிற்கும் தொடர்புள்ளதா என்பதை WWE அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரைச் சேர்ந்த ஜெர்மைன் ஹேலி, 2007-ம் ஆண்டு மல்யுத்த வாழ்க்கையைத் தொடங்கினார். 2019-ல் WWE நிறுவனத்தில் இணைந்த அவர், 'NXT வட அமெரிக்க சாம்பியன்' பட்டத்தை வென்றார். 2021-ல் விலகி, 2022-ல் மீண்டும் WWE-க்குத் திரும்பிய அவர், 2024-ம் ஆண்டில் புகழ்பெற்ற 'ஆண்ட்ரே தி ஜெயண்ட் மெமோரியல் பேட்டில் ராயல்' பட்டத்தை வென்று அசத்தினார்.
'சுனாமி' என்ற தனது அதிரடி நகர்வால் ரசிகர்களிடம் பிரபலமான இவர், சமீபத்தில் சேத் ரோலின்ஸ் மற்றும் பால் ஹேமன் ஆகியோருடன் 'தி விஷன்' குழுவில் இணைந்து விளையாடி வந்தார்.
பிரான்சன் ரீட் தனது பள்ளிப் பருவக் காதலியான பெய்ஜ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2024-ம் ஆண்டு 'டெஜா' என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது அவரது மனைவி இரண்டாவது குழந்தையைக் கருவுற்றுள்ளார்.
இச்சூழலில் அவரது திடீர் மறைவு மல்யுத்த வீரர்களையும் உலகெங்கும் உள்ள WWE ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.