

16-வது உலக கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியத்தில் உள்ள வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல் வீன் ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி இந்த போட்டியில் விளையாடும் 16 நாடுகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ‘டி’ பிரிவில் இருக்கிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான், வேல்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வேல்சை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
2-வது போட்டி யில் 2-4 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோற்றது. நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (5 மற்றும் 21-வது நிமிடங்கள்), அபிஷேக் (11 மற்றும் 24), தலா 2 கோலும், ஹர்திக் (35) ஒரு கோலும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹன்னன் ஷாஹித் 2 கோலும் (22 மற்றும் 46-வது நிமிடங்கள்) சுப்யான் கான் ஒரு கோலும் (24) பதிவு செய்தனர்.
இந்த பிரிவில் இங்கிலாந்து 9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. பாகிஸ்தான், வேல்ஸ் தலா 1 புள்ளிகளுடன் வாய்ப்பை இழந்தன. 9 முதல் 16- இடங்களுக்கான போட்டியில் அவைகள் விளையாடும்.
2-வது சுற்றில் இந்திய அணி ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதேபோல இங்கிலாந்தும் அந்த பிரிவில் உள்ளது. ஏ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளும் அதில் இடம் பெறும்.
‘ஏ ’ பிரிவில் நெதர்லாந்து 6 புள்ளிகளுடன் 2-வது சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றது. 2-வது அணியாக நுழைவது யார்? என்பதில் அர்ஜென்டினா, நியூசிலாந்து (தலா 3 புள்ளிகள்) இடையே போட்டி நிலவுகிறது. இரு அணிகள் இடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி முன்னேறும்.
நெதர்லாந்து கடைசி ஆட்டத்தில் வாய்ப்பை இழந்த ஜப்பானை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடிக்கும். எதிர்பாராத விதமாக தோற்றாலும் முதல் இடத்துக்கு பாதிப்பு இருக்காது. ஏனென்றால் கோல்கள் வித்தியாசத்தில் வலுவாக இருக்கிறது.
இந்திய அணி 2-வது சுற்றில் முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. வருகிற 22-ந் தேதி இந்த போட்டி நடக்கிறது. 24-ந் தேதி அர்ஜென்டினா அல்லது நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
2-வது சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் லீக் சுற்றில் பெற்ற வெற்றியால் 3 புள்ளிகளுடன் 2-வது ரவுண்டில் விளையாடும்.