மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து நாளை மோதல்

இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.உலக கோப்பையை இந்தியா வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து நாளை மோதல்
Published on

துபாய்:

9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. போட்டிகள் துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது.

வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.

இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம்-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நாளை நியூசிலாந்துடன் மோதுகிறது. இப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது.

இந்திய அணி பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட் ரிக்ஸ், ஷபாலி வர்மா, ரிச்சாகோஷ், ஹேமலதா ஆகியோரும், பந்துவீச்சில் தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்ட்ரகர், ரேணுகா சிங், ராதா யாதவ், ஆஷா சோபனா ஆகியோரும் உள்ளனர். இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

சோபி டிவைன் தலை மையிலான நியூசிலாந்து அணியில் அமெலியா கெர்,பேட்ஸ்,ஜார்ஜியா பிளிம்மர்,லியா தஹுஹு, ஜெசிகா கெர், ஈடன் கார்சன், மேடி கிரீன், பிரான் ஜோனாஸ், புரூக் ஹாலிடே, ரோஸ்மேரி மெய்ர் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

இதுவரை இந்திய மகளிர் அணி எந்த உலக கோப்பையையும் வெல்லவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றது. இம்முறை உலக கோப்பையை இந்தியா வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com