

16-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி பெல்ஜியத்தில் உள்ள வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து- பெல்ஜியம் அணிகள் மோதின.
இதில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
பிரடெரிக் மாட்லா 28-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 9 முறை உலக கோப்பையை வென்ற நெதர்லாந்து 14-வது தடவையாக இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.
போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவை சந்திக்கிறது. 2-வது அரை இறுதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஜூலிட்டா ஜான்குனாஸ் 47-வது நிமிடத்தில் கோலை பதிவு செய்தார்.
2 முறை சாம்பியனான அர்ஜென்டினா 7-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நெதர்லாந்து- அர்ஜென்டினா அணிகள் மோதும் இறுதிப்போட்டி நாளை (29-ந் தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. கடந்த முறையும் இந்த இரு அணிகளுமே இறுதிப் போட்டியில் விளையாடின.
முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம்- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய பெண்கள் அணி 5-வது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்று 5-வது இடத்தை பிடித்தது. ஜெர்மனிக்கு 6-வது இடம் கிடைத்தது.
ஸ்பெயின், சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, சிலி ஆகிய நாடுகள் முறையே 7 முதல் 16-வது இடங்களை பிடித்தன.
ஆண்கள் பிரிவில் அரை இறுதி மற்றும் ஒவ்வொரு இடத்துக்கான போட்டிகள் இன்று நடக்கிறது. இந்திய அணி 7 - வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியத்தை இரவு 9.30 மணிக்கு சந்திக்கிறது.