

8 அணிகள் பங்கேற்று உள்ள 10-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி. ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினத்துடன் அங்கு முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்தன.
2 நாள் ஓய்வுக்கு பிறகு 2-வது மற்றும் இறுதி கட்ட டி.என்.பி.எல். போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (18- ந் தேதி) தொடங்குகிறது.
எஞ்சிய 8 லீக் ஆட்டம், பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி என 12 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.
22-ந் தேதியுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது. 23-ந்தேதி குவாலி பயர்-1, 24-ந் தேதி எலிமினேட்டர், 26-ந் தேதி குவாலிபயர்-2, இறுதிப் போட்டி 28-ந் தேதியும் நடைபெறுகிறது.
இதுவரை நடைபெற்ற 20 ஆட்டங்களின் முடிவில் மதுரை பாந்தர்ஸ் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய அணிகள் முறையே 2 முதல் 5- வது இடங்களில் உள்ளன. இந்த அணிகள் 3 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 6 புள்ளிகளுடன் இருக்கிறது.
கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் 2 வெற்றி, 3 தோல்வியுடன் தலா 4 புள்ளிகளுடன் 6 மற்றும் 7- வது இடங்களில் உள்ளன. சேலம் ஸ்பார்டன்ஸ் 5 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறாமல் பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை, சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும். 21-வது லீக் ஆட்டத்தில் என்.ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் போட்டியில் நெல்லையிடம் 50 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் திருப்பூரிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.
3-வது போட்டியில் திண்டுக்கல்லை 7 விக்கெட் வித்தியாசத்திலும், 4- வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார் டன்சை 5 விக்கெட் வித்தியாசத்திலும், 5-வது போட்டியில் மதுரை பாந்தர்சை 39 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோவையை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெறுவது அவசியமாகும்.
கேப்டன் என். ஜெகதீசன் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் 5 போட்டியில் 3 அரை சதத்துடன் 301 ரன்கள் எடுத்துள்ளார்.
சராசரி 75.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 171.02 ஆகும். மோகித் ஹரிகரன், சுவப்னில் சிங், ஆசிக் போன்ற சிறந்த பேட்ஸ் மேன்களும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களில் விக்னேஷ் 6 விக்கெட்டும், அபிஷேக் தன்வர், சிலம்ப ரசன், பிரேம் குமார் தலா 5 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
கோவை கிங்ஸ் 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. முன்னாள் சாம்பியனான அந்த அணி சேலத்தை 34 ரன் வித்தியாசத்திலும், திருச்சியை 116 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.
மதுரை (6 விக்கெட்), திருப்பூர் (4 விக்கெட்), நெல்லை (2 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்று இருந்தது.
அந்த அணியின் பேட்டிங் கில் சச்சின் (310 ரன்), ஆந்திரே சித்தார்த் (149 ரன்) ஆகியோரும் பந்து வீச்சில் தீபன் லிங்கேஷ் (11 விக்கெட்), கிஷோர் (9 விக்கெட்), சுப்பிரமணியம் (8 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.