

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-ம் கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடி யத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் திருச்சி கிரான்ட் சோழாஸ் 28 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது. திருச்சி அணி பெற்ற 4-வது வெற்றியாகும். திண்டுக்கல் அணி 4-வது தோல்வியை தழுவியது.
இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்- சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மதுரை அணி 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி திருப்பூரை வீழ்த்தி 5-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
மதுரை அணி, திருச்சி (2 விக்கெட்), கோவை (6 விக்கெட்), சேலம் (36 ரன்), திண்டுக்கல் (21 ரன்) ஆகியவற்றை வீழ்த்தியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் 39 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
திருப்பூர் அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளி யுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மதுரையை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
அந்த அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (7 விக்கெட்), நெல்லை (8 விக்கெட்), கோவை (4 விக்கெட்) ஆகியவற்றை தோற்கடித்தது. திண்டுக்கல் (7 விக்கெட்), திருச்சி (17 ரன்) ஆகியவற்றிடம் தோற்றது.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சோனு யாதவ் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- அபிஷேக் தலைமையிலான சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நெல்லை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி பலவீனமான சேலத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
சேலம் அணிதான் விளையாடிய 5 ஆட்டத்திலும் தோற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது. நெல்லை அணிக்கு அதிர்ச்சியை கொடுத்து முதல் வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.