ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே இலக்கு- பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சோலைராஜ் பேட்டி

தனது விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை பெற்றார்.
Paralymbic player Solairaj
Published on: 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஏ.குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜ்- ஈஸ்வரி தம்பதியின் மகன் சோலைராஜ் (வயது 31). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, தனது 19-வது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

கடந்த 2018-ம் ஆண்டு திடீரென ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் தனது இடது காலை இழந்தார். வாழ்க்கையில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்ட போதிலும், அவர் மனம் தளரவில்லை.

உடல் குறைபாட்டை ஒரு தடையாகக் கருதாமல், தன்னம்பிக்கையுடன் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் பயிற்சியில் ஈடுபட்டார்.

நீளம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் செலுத்திய அவர், கடுமையான பயிற்சியின் மூலம் தடகள வீரராக உருவெடுத்தார். தனது விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை பெற்றார்.

கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியின் டி64 பிரிவில் சோலைராஜ் பங்கேற்றார்.

இதில் 6.80 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தனது சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்தார்.

இந்த வெற்றியுடன் அவர் தனது முயற்சியை நிறுத்திக் கொள்ளவில்லை. சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பயிற்சியைத் தீவிரப்படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, ஜப்பானின் நாகோயா நகரில் நடைபெற்ற 2026-ம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் நீளம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து 2-வது முறையாக தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சர்வதேச அளவில் சாதனை படைத்து சொந்த ஊர் திரும்பிய சோலை ராஜுக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்து வாழ்த்தினர்.

தொடர்ந்து செய்தி யாளர்களிடம் சோலைராஜ் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்வதே எனது முக்கிய இலக்கு. அதற்காகத் தொடர்ந்து கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறேன்.

இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் கல்வி மற்றும் விளையாட்டில் ஏதாவது ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டு, அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com