விம்பிள்டன் டென்னிஸ் நாளை தொடக்கம்: பெடரர் சாதனையை ஜோகோவிச் சமன் செய்வாரா?

ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.
விம்பிள்டன் டென்னிஸ் நாளை தொடக்கம்: பெடரர் சாதனையை ஜோகோவிச் சமன் செய்வாரா?
Published on

லண்டன்:

டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாமாகும். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. உலகின் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) இந்த இரண்டு போட்டியிலும் பட்டம் பெற்றார். பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்றபோது அவர் புதிய வரலாறு படைத்தார். ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி 23-வது கிராண்ட் சிலாமை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார்.

பெண்கள் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், இகா ஸ்வியா டெக் (போலந்து), பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் பெற்றனர்.

3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 16-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெட்வ தேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

புல் தரை ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியான விம்பிள்டனில் ரோஜர் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அவரது சாதனையை ஜோகோவிச் சமன் செய்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

நடப்பு சாம்பியனான அவர் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை விம்பிள்டனில் வெற்றி பெற்றார். கொரோனா காரணமாக 2020-ல் போட்டி நடைபெறவில்லை. ஜோகோவிச் 24-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.

அல்காரஸ் மெட்வதேவ் அவருக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலையில் உள்ள இகா ஸ்வியாடெக், ஷபலென்கா, எலினாரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com